பயிற்சியாளரே தெய்வம்; பாராலிம்பிக் சங்கம் சும்மா : மாரியப்பன் சீற்றம்

பயிற்சியாளரே தெய்வம்; பாராலிம்பிக் சங்கம் சும்மா : மாரியப்பன் சீற்றம்


Murugan| Last Updated: வியாழன், 15 செப்டம்பர் 2016 (16:32 IST)
பாராலிம்பிக் சங்கம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனக்கு எல்லாமும் என் பயிற்சியாளரே செய்தார் என்று பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ரியோ பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் மாரியப்பன் தங்கவேலு. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இதற்கு முன்பு பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் 1.74 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. ஆனால், மாரியப்பன் 1.89 மீட்டர் தாண்டி, புதிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
 
அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார். மேலும் மஹிந்திரா நிர்வாகம் அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு ஜீப்பும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில், மாரியப்பன் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் பயிற்சியாளர் சத்யநாராயணாவை சந்தித்தேன். அவர்தான் எனக்குள் இருந்த திறமையை கண்டுபிடித்து எனக்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். நான் அதுவரை வெறுங்காலில்தான் உயரம் தாண்டி வந்தேன். அவர்தான் காலணி அணிந்து பயிற்சி செய்வதை கற்றுக் கொடுத்தார்.


 

 
பயிற்சி கொடுப்பதற்காக பணம் வாங்கும் பயிற்சியாளர்கள் இருக்கும் இந்த காலத்தில், அவர் மாதம் ரூ.10 ஆயிரம் கொடுத்து என் குடும்பத்திற்கு உதவினார்.  என்னை ஜெர்மனிக்கு அனுப்பி அங்கு பயிற்சி பெற வைத்தார்.
 
எனக்காக அவர் பல துயரங்களை சந்தித்தார். அவர் இல்லையேல் இந்த வெற்றி சாத்தியமில்லை. இப்போது ராஜேந்திரன், இளம்பரிதி ஆகியோர் என் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதாய் கேள்விப்பட்டேன். அவர்களுக்கும் என் வெற்றிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
முக்கியமாக,  தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் எனக்காக ஒரு துரும்பிக் கூட கிள்ளிப் போடவில்லை. என்னுடைய வெற்றிக்கு ஒரே காரணம் எனது பயிற்சியாளர் சத்யநாராயணன் தான். என் வெற்றியே அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியின்போது இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :