வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (16:59 IST)

பைனான்ஸியரை காரில் கடத்தி கொலை - வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கரூர் அருகே பைனான்ஸியரை காரில் கடத்தி கொலை செய்து எரித்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 24 வருட சிறைதண்டனையும், ஒரு லட்சமும் அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.



 
கரூர் வெங்கமேடு பகுதியில் வசித்தவர் கண்ணன் (வயது 32), இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம் தேதி கரூர் அருகே உள்ள க.பரமத்தியை அடுத்த தென்னிலை பகுதியில் உள்ள சி.கூடலூர் அருகே சாலை ஒரத்தில் அவரது காரில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். 
 
இது குறித்து க.பரமத்தி போலீஸார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம், ஒலப்பாளையம் விவசாயி கணேசன் (வயது 30), என்பவர் பைனான்ஸ் அதிபர் கண்ணனிடம் ரூ 1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதும், அதை திருப்பி கேட்டதில் கண்ணனுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதனால் கண்ணனை, பணம் தருவதாக தென்னிலைக்கு வரவழைத்து மது வாங்கி கொடுத்து பின்னர் இரும்பு கம்பியால் கண்ணனை தலையில் தாக்கி கொலை செய்ததுடன், அவரது காரில் அமரவைத்து பெட்ரோல் ஊற்றி தடயத்தை கணேசன் மறைத்ததாக தெரியவந்தது. 
 
இதுகுறித்து வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமலதா குற்றவாளி கணேசனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும், சதிதிட்டம் தீட்டிய குற்றத்திற்காக 7 வருடம் சிறைத்தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும், கண்ணனிடம் இருந்த நகைகளை வழிப்பறி செய்ததாக 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ 30 ஆயிரம் அபராதமும், தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும், இவை அனைத்தையும், ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார். 
 
மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகேஸ் என்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்