1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (10:17 IST)

மதுரை முருக பக்தர் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடு.. நீதிமன்றம் சென்ற அர்ச்சகர்..!

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர் மாநாட்டில், முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகளை அமைக்க காவல்துறை முதலில் மறுப்பு தெரிவித்ததால், இந்து முன்னணி அமைப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாதிரி வீடுகளை அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் ஒரு புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
 
சங்கத்தின் தலைவர் வா. அரங்கநாதன் இந்த மனுவில் கூறியதாவது: "அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம விதிப்படியே, மூலவருக்கு பூஜைகள் செய்து, உற்சவர் சிலையை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். ஆனால், இந்து முன்னணியினர் அமைக்கும் மாதிரி அறுபடை வீடுகளில் மூலவர் சிலையே அமைக்க முடியாது. மேலும், மாதிரி வீடுகளில் இருவேளை பூஜை செய்வது ஆகமங்களுக்கு எதிரானது."
 
அவர் தொடர்ந்து கூறுகையில், "ஆன்மிகத்தை அரசியலுக்கும், கடவுளை கட்சிக்கும் பயன்படுத்துவது கூடாது. மாதிரி அறுபடை வீடுகளை அமைக்க, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே, மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். இது கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும்," என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
Edited by Mahendran