அஜித் குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நிகிதா நேரில் ஆஜராக உத்தரவு..!
மதுரை மாவட்டம் மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் புதிய திருப்பமாக, இவ்வழக்கில் பொய் புகார் அளித்ததாக கூறப்படும் நிகிதாவை நேரில் ஆஜராகுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் நோக்கில் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் நிகிதா அளித்த தகவல்கள் மற்றும் புகார்கள் முரணாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்பதால், அவரை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிகிதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாகவோ அல்லது புகார்தாரராகவோ இருந்தவர் மீது பொய் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதும், சிபிஐ இதில் நேரடியாக களமிறங்கியுள்ளதும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva