வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2016 (15:06 IST)

சிறையில் மனநிலை பாதிக்கப்பட்ட கைதி அடித்துக்கொலை

மதுரை மத்திய சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட கைதிகள் ஒருவரையொருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.



 

 
 
மதுரை கீரைத்துறையை சேர்ந்த செந்தில். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களில் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற கைதியை செந்தில் அடைக்கப்பட்டு இருந்த அதே அறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை சவுந்திரபாண்டியை கொலை செய்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து, இருவரும் ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களாக செந்திலுக்கும், செந்தில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், 2 பேரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். நேற்று நள்ளிரவும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஒருவரையொருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். இதில், செந்தில்குமார் தாக்கியதில் செந்தில் படுகாயம் அடைந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த சிறைக் காவலர் உடனடியாக ஜெயில் சூப்பிரண்டுக்கு தகவல் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயில் சூப்பிரண்டு மற்றும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்திலை அறையில் இருந்து மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து மதுரை கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.