முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் கடந்த ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.
இதற்கிடையே, செம்மண் முறைகேடு மூலம் பெறப்பட்ட தொகையை ஹவாலா மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக கூறி அமலாக்கத் துறை PMLA வழக்கை பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், இந்த பணப்பரிமாற்ற வழக்கைத் தொடர முடியாது என்று கோரி பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மூல வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டதால், அமலாக்கத்துறையின் வழக்கை மட்டும் தனியாகத் தொடர முடியாது எனக் கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

