நீதிமன்ற அவமதிப்பு என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.. நீதிபதி வேதனை..
ஒரு காலத்தில் 'நீதிமன்ற அவமதிப்பு' என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும், ஆனால் இப்போது அந்தப் பயமே அதிகாரிகளிடம் இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் செந்தில்குமார் என்பவரது பணியிட மாற்றத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தும், துறை அதிகாரிகள் அவரைப் பணியில் சேர அனுமதிக்கவில்லை மற்றும் ஊதியத்தையும் விடுவிக்கவில்லை. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி, அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தத் தவறுகின்ற ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தின் கண்ணியம் குறைவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதே அரசின் கடமை என்பதை அரசு வழக்கறிஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
முன்பெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அரிதாகவே தொடரப்படும், ஆனால் இப்போது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் துச்சமாக மதிக்கும் சூழல் உருவாகியுள்ளது என நீதிபதி ஆதங்கப்பட்டார். உயர்நீதிமன்றத்தின் இந்த காட்டமான கருத்துகள் அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
