1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை: நீதிமன்றம்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவு குறித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக தரப்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் விக்டோரியா கவுரி மற்றும் செந்தில்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாளை தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 'நம்பிக்கை வாக்கெடுப்பு' நடைபெற உள்ள சூழலில், திருப்பத்தூர் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஒரு ஓட்டு வித்தியாசம் என்பதால், மறுவாக்கு எண்ணிக்கை அல்லது தேர்தல் நடைமுறைகளில் ஏதேனும் குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்பதைத் தெளிவுபடுத்தும் வரை அவர் வாக்களிக்கக் கூடாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தவெக அரசுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வின் வாக்கும் மிக அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில், ஒரு உறுப்பினருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை ஆளுங்கட்சிக்குச் சிறு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், தவெக தரப்பு இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Edited by Siva
