வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 2 ஜூலை 2015 (18:55 IST)

பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானிக்கு தமிழக அரசு துணைபோகிறது - மு.கருணாநிதி

பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபருக்கு தமிழக அரசு துணைபோகிறது என்றும் அதனால்தான் அவரின் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி அளித்துள்ளது என்றும் திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தி குறிப்பில்,
 
"சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று 1400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசுடன் குஜராத் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறதாமே என்ற கேள்விக்கு, கடந்த 16-6-2015 அன்று “முரசொலி” கேள்வி பதில் பகுதியில், நான் பதில் அளிக்கும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், மிகப் பெரிய செல்வந்தருமான அதானிக்குச் சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது. இதையும் ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்து வதற்கான பேச்சு வார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கின் மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் விடுதலைக்கும், அதானியின் இந்தச் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!” என்று பதில் அளித்திருந்தேன்.
 
இதைத் தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் அவர்கள் 17ஆம் தேதி விடுத்த அறிக்கையில், சூரிய ஒளி மின்சாரத்தில், அதானி நிறுவனத்துக்காக விதி முறை மீறல் நடைபெற்றதாக விரிவாகத் தெரிவித்திருந் தார். மேலும் அவரது அறிக்கையில், “சூரிய ஒளி மின்சாரக் கொள்முதலின் அளவை தமிழகத்தின் ஒட்டுமொத்தத் தேவையில் 2 சதவீதம் என்ற அளவுக்கு அதாவது 1460 மெகாவாட்டாக உயர்த்த முடிவு செய்து, அதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதலை தமிழக அரசு கோரியுள்ளது. எனினும் இதற்கான அனுமதியை ஆணையம் இன்னும் வழங்கவில்லை. இத்தகைய சூழலில் 365 மெகாவாட்டுக்கு மேல் ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முடியாது. ஆனால், அதானி குழுமத் துடன் 216 மெகாவாட் உட்பட 632 மெகாவாட் அளவுக்கு மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் மின்வாரியம் கையெழுத்திட்டிருக்கிறது. 
 
இது தவிர மேலும் 648 மெகாவாட் அளவுக்கு புதிய ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்திட விருக்கிறது. இது சட்ட விரோதமாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வழங்க, தனியார் நிறுவனங்கள் முன் வந்தன. அவற்றில் 3,800 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து வழங்க முன் வந்த நிறுவனங்கள் அதற்கான ஆவணங் களைத் தாக்கல் செய்ததோடு, 50 சதவீதம் காப்புத் தொகையையும் செலுத்தி விட்டன. அந்த நிறுவனங்களுக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் வழங்கிய பிறகு தான் அதானி குழுமம் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் மின்சாரக் கொள் முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால் அவைகளைக் காத்திருக்க வைத்து விட்டு அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயல்கிறார்கள். அடுத்து, சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள் முதல் விலை ரூ. 5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ஐந்து ரூபாய் அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதானி நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்து கொள்கிறது” என்று விரிவாகத் தெரிவித்திருந்தார்.
 
மிக முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து, நான் விடுத்த அறிக்கைக்கோ, டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கைக்கோ தமிழக அரசின் சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ, மின் துறை அமைச்சர் சார்பிலோ ஏதாவது விளக்கம் கூறப்பட்டதா என்றால் இல்லவே இல்லை. இதிலிருந்தே, அரசிடம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதுவுமில்லை என்பதும், குற்றச்சாட்டுகளில் அடிப்படை உண்மைகள் உள்ளன என்பதும் ஊர்ஜிதமாயிற்று.
 
திரேசே கன்சார்டியம் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தங்கள் நிறுவனம் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்த போதிலும், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட போது, உயர் நீதி மன்ற நீதிபதி திரு சத்யநாராயணா அவர்கள் கடந்த மாதம் புதிய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு முடியும் வரை புதிய டெண்டர் விடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப் புள்ளி கோரப் பட்டுள்ளது. இதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று சீன நிறுவனம் மீண்டும் ஒரு மனுவை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்து, அந்த மனுவில் நீதிபதி திரு. சத்யநாராயணா அவர்கள் “இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. தீர்ப்பு பிறப்பிக்கும் வரை புதிய ஒப்பந்தப் புள்ளியைத் திறப்பதற்கு தடை விதிக்கப் படுகிறது” என்று உத்தரவிட்டிருக்கிறார்.
 
மற்றொரு நிகழ்ச்சி. ஜெயலலிதா இஸ்லாமியப் பெருமக்களுக்கு 1.7.2015 அன்று இஃப்தார் விருந்து அளிக்கப் போவதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதற்காக வழியெங்கும் ஆடம்பர அலங்கார வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஜெயலலிதாவே அழைப்பு விடுத்திருந்ததால், இஸ்லாமியப் பெருமக்களும், தோழமைக் கட்சியினரும் கூட விருந்துக்கு வருகை தந்தார்கள். ஆனால் அவர்களை யெல்லாம் யார் விருந்துக்கு அழைத்தார்களோ, அந்த ஜெயலலிதா நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கே வரவில்லை. உடல் நலக் குறைவு காரணமாக அவர் விருந்துக்கு வரவில்லை என்று கடைசி நேரத்தில் கூறப்பட்டுள்ளது. முதல் அமைச்சருக்கு உடல் நலக் குறைவு என்றால் அலட்சியப்படுத்தப்படக் கூடியதா? அதுபற்றிய விவரம் என்ன என்று முறைப்படி அரசு அறிவிக்க வேண்டாமா? பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அல்லவா? " என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.