1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (17:29 IST)

அதிமுக அரசின் குளறுபடியால் தனியார் பள்ளிகள் ஏழை மாணவ-மாணவியர் கல்வியை தடுக்க வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசின் குளறுபடிகளுக்காக தனியார் பள்ளிகள் ஏழை மாணவ-மாணவியர் கல்வியை தடுக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கட்டணம் இல்லாமல் 25 சதவீத மாணவர்களை சேர்க்க வேண்டும். ஆனால் இந்த வருடம் அந்த 25 சதவீத மாணவர்களைக் சேர்க்கப் போவதில்லை என்று நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளின் சங்கத்தினர் திடீரென்று அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத்தை அதிமுக அரசின் கல்வித்துறை கடந்த மூன்று வருடங்களாக செலுத்தவில்லை என்பதையே தனியார் பள்ளி சங்கத்தினர் இந்த முடிவிற்கான காரணமாகக் கூறியிருக்கிறார்கள்.
 
சமுதாயத்தில் நிலவும் சமூக-கல்வி அந்தஸ்தை பாதிக்கும் வகையில் தனியார் பள்ளிகளின் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதும், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணத்தைக் கொடுக்காமல் அதிமுக அரசு இழுத்தடிப்பதும் முற்றிலும் நியாயமற்றது. "கல்வி பெறும் உரிமைச் சட்டம்" சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒரு உன்னதமான சட்டம். ஆகவே அதிமுக அரசின் நிர்வாக குறைபாடுகளைக் காரணம் காட்டி தனியார் பள்ளிகள் இப்படியொரு முடிவினை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் நாளைய தலைமுறையாகப் போகும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாமல், சம்பந்தபட்ட தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் அதிமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
சமுதாயத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மாணவர்களும் பயனடையும் விதத்தில் "கல்வி உரிமை பெறும் சட்டம்" இருக்கிறது. இதன்படி சேர்க்க வேண்டிய 1.43 லட்சம் மாணவர்களில் 11 சதவீதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று அகமதாபாத் ஐஐஎம் ஆய்வு கூறியிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி இப்படி அலட்சியமாக இருந்தால், பிரகாசமான, செழிப்பான தமிழகத்தை உருவாக்க முடியாது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.