1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Landmark Reform in TN: TVK Government Launches Online Land Registration From August 17

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

தமிழக அரசியல்
தமிழகப் பத்திரப்பதிவு துறையை எளிமைப்படுத்தும் நோக்கில், ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு செய்யும் புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரும் என்று தவெக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வம் தெரிவித்துள்ளார். மக்கள் நீண்ட நேரமாக காத்துக்கிடந்து அலைந்து திரிவதை தவிர்க்கும் பொருட்டு, தமிழக வெற்றி கழக அரசு இத்திட்டத்தை திட்டமிட்டுள்ளது.
 
முதன்முறையாக நிலம், வீடு வாங்குபவர்களுக்கும் மற்றும் அவற்றை விற்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு முறையோடு சேர்த்து, Anywhere Registration எனப்படும் எந்த பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யும் முறையும் அன்றைய தினமே அமலுக்கு வருகிறது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமலேயே தங்களின் வீடுகளில் இருந்தபடியே முறைப்படி பத்திரப்பதிவை எளிதாக முடித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தவெக அரசின் இந்த அதிரடி டிஜிட்டல் சீர்திருத்தம், தரகர்களின் தலையீட்டையும், முறையற்ற லஞ்ச ஊழல்களையும் ஒழிக்க உதவும் என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia