த்ரிஷாவிடம் உதயநிதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு பதிவு
நடிகை த்ரிஷாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதியின் சமீபத்திய மேடை பேச்சு மிகவும் தரக்குறைவானது, மலிவானது மற்றும் அவர் விரும்பும் அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளது என்று குஷ்பு விமர்சித்துள்ளார்.
பெண்களை இழிவாக பேசி அதன் மூலம் கிடைக்கும் கைதட்டல்களையும் விசில்களையும் கண்டு மகிழ்ச்சியடையும் மனநிலை கொண்டவர்கள் ஒரு மாநிலத்தை ஆள நினைத்தால், கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் எனக் கூறிய குஷ்பு, அரசியலுக்காக பெண்களை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும், பொதுமேடையில் நடிகை த்ரிஷாவை அவமதித்ததற்காக உதயநிதி அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தனது இழிவான பேச்சை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதற்கான துணிச்சலும் கண்ணியமும் உதயநிதியிடம் இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் சாடியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவு தமிழக அரசியலிலும் திரைத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
