1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kumbakonam School Fire Survivor Jenifer Triumphs Over Tragedy to Become Deputy Collector

கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய சிறுமி... இன்று தமிழகத்தின் துணை மாவட்ட ஆட்சியர்!

கும்பகோணம் தீ விபத்து
2004-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த கோர விபத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பி பிழைத்த சிறுமி ஜெனிபர், இன்று தன் விடாமுயற்சியால் தமிழகத்தின் துணை மாவட்ட ஆட்சியராக பதவியேற்க உள்ளார்.
 
அன்று நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஜெனிபர், விபத்து நடந்த நேரத்தில் தரைத்தளத்திற்கு வந்ததால் தம்பியுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது நெருங்கிய தோழிகள் பலர் அந்தத் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அவரது மனதில் ஆழமான வடுவையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியது. விபத்துக்கு பின், அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் செய்த உதவிகளும், அவர் காட்டிய ஆறுதலும் ஜெனிபரின் மனதில் சிவில் சர்வீஸ் கனவை விதைத்தன.
 
குடும்ப வறுமை காரணமாக இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால், ஹோம் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை கொண்டு போட்டி தேர்வுகளுக்குத் தயாரானார். மாதாந்திர வருமானம் ரூ.3,000 மட்டுமே இருந்த நிலையிலும், ஜெனிபரின் அட்மினிஸ்ட்ரேட்டர் கனவுக்கு அவரது தாய் சுஜாதா பெரும் அரணாக நின்றார்.
 
ஐந்து ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று ஜெனிபர் சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் எந்தப் பள்ளியிலும் இது போன்ற தீ விபத்துக்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என்று ஜெனிபர் கூறியுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு: சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!