வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2016 (08:34 IST)

குமாரசாமி கணக்கு சரியே; கர்நாடக அரசின் தலையீடு சரியா? - ஜெயலலிதா பதில் மனு

குமாரசாமி கணக்கு சரிதான் என்றும் கர்நாடக அரசின் தலையீடு சரியானதல்ல என்றும் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை தொடர்பான பதில் மனுவில் ஜெயலலிதா தரப்பு தெரிவித்துள்ளது.
 

 
17 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன்ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
 
மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதமும் விதித்து, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அவரது எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டது. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர்.
 
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி குமாரசாமி, வருமானத்திற்கு அதிகமாக 10 சதவிகிதம் வரை சொத்து சேர்க்கலாம் என்றும், ஜெயலலிதா 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சொத்துசேர்த்திருப்பதாகவும் கூறி, அவரையும் அவருடன் சேர்த்து சசிகலா உள்ளிட்டோரையும் விடுதலை செய்தார்.
 
ஆனால், ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 76.7 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்பதாகவும், சொத்துக்களை கணக்கிட்டதில் நீதிபதி குமாரசாமி தவறிழைத்து விட்டதாகவும், வழக்கை நடத்திய கர்நாடக அரசு குற்றம் சாட்டியது. மேலும்,ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தார்.
 
இந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, கர்நாடக அரசு, அன்பழகன் மற்றும் ஜெயலலிதா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இதனடிப்படையில் கர்நாடக அரசுத் தரப்பிலும், அன்பழகன் தரப்பிலும் சில நாட்களுக்கு முன்பு பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஜெயலலிதாவின் சொத்துக்களை கணக்கிட்டதில் ஏற்பட்ட பிழையே பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
 
ஜெயலலிதா தரப்பில் பெற்ற கடன் 10 கோடியே, 67 லட்சத்து 31 ஆயிரத்து 274 ரூபாய் என்றநிலையில், அது 24 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 274 ரூபாய் என்று அதிகமாக காட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 
அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்றும் சொத்துமதிப்பு, வருமானம் எல்லாம் சரியாகவே கணக்கிடப்பட்டு உள்ளது எனவும் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ‘இந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தமிழ்நாடு தொடர்பு உடையவை. எனவே கர்நாடக அரசுக்கு மேல்முறையீடு செய்ய எந்த முகாந்திரமும் கிடையாது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு தமிழ்நாட்டின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு மட்டுமே முகாந்திரம் உள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கோர்ட்டுக்கு மாற்றி வழக்கை நடத்துவதற்கு மட்டுமே கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த வழக்கில் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
 
இதுபோன்ற மேல்முறையீட்டை தாக்கல் செய்திருப்பதால் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்துள்ளது. இது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 162 மற்றும் 245 ஆகியவற்றை மீறும் செயலாகும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.