எங்களை வெற்றி பெற வைக்கவில்லை எனில், கூட்டணி கட்சிகளை தோற்கடிப்போம்: கிருஷ்ணசாமி
பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கூட்டணி அரசியல் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.
கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் நேர்மையுடன் ஒத்துழைப்பு அளித்திருந்தால், தான் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன் என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது எளிதான காரியம் என்றாலும், களத்தில் மற்ற கட்சிகளின் உண்மையான ஒத்துழைப்பை பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனாலேயே தேர்தல் நேரங்களில் கூட்டணி முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். "பரமக்குடியில் எங்களை வெற்றி பெற வைக்க கூட்டணி கட்சிகள் தவறினால், அதற்கு பதிலாக முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்," என்று அவர் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
நேர்மையற்ற கூட்டணி அரசியலால் தனது வெற்றி வாய்ப்புகள் பறிபோவதை இனி அனுமதிக்க முடியாது என்ற நோக்கில் அவரது இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva