1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2015 (17:37 IST)

”திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்”: திருமாவளவன் மீது கோவை பெண் மீண்டும் புகார்!

கோவையை சேர்ந்த கவிதா (34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திலும் கோவை கமிஷனர் அலுவலகத்திலும் பல தடவை புகார் கொடுத்துள்ளார்.
 
தன்னுடன் பழகிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக திருமாவளவன் மீது கவிதா புகார் மனுவில் கூறி இருந்தார்.
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார்.
 
இது பற்றி கவிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
திருமாவளவன் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத் தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன்.
 
தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
 
‘உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது’ என்கிறார். ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர்.
 
என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள். என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நான் எங்கு சென்றாலும் அந்த பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார்.
 
முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன். என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலீசில் 10 தடவை புகார் செய்துள்ளேன்.
 
ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவகத்தில் இன்று முதல் தர்ணா போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.
 
இவ்வாறு கூறிவிட்டு கவிதா தன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
 
கவிதா டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்ததை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அங்கு திரண்டிருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலம் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.