காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்தி குத்து - கோயம்பேட்டில் பரபரப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (13:17 IST)
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் முகத்தில் குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த  இளம்பெண் சிவரஞ்சனி (25). இவர், ஆச்சி மசாலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு சொந்த ஊ‌ரான திருவாரூருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 
அப்போது கிண்டியை சேர்ந்த அரவிந்த் (32) என்பவர் பின் தொடந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அரவிந்தும், சிவரஞ்சனியும் ஒரு தனியார் கம்பெனி ஒன்றில், ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது அரவிந்துக்கு சிவரஞ்சனி மீது ஒருதலை காதல் உருவாகி உள்ளது.
 
ஆனால் சிவரஞ்சனி அரவிந்தை காதலிக்கவில்லை. அவனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் மேலும் அரவிந்த் தொல்லை கொடுக்கவே தான் வேலை பார்த்த இடத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு ஆச்சி மசாலா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனாலும் அரவிந்த் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில், சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள தமிழக தேர்தல் ஆணையம் அருகே, அரவிந்த் சிவரஞ்சனியை வழி மறித்துள்ளார். பின்னர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதை அடுத்து, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை கொல்ல குத்தியுள்ளார்.
 
இதில் முகத்தில் குத்துபட்டு உதடு பகுதி கிழிந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றுள்ளார். இதைபார்த்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து கோயம்பேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
கத்தி குத்தால் காயம் அடைந்த இளம் பெண் சிவரஞ்சனி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :