நீங்கள் இருந்து பார்க்க வேண்டும்: சட்டசபையில் கர்ஜித்த ஜெயலலிதா


Caston| Last Updated: செவ்வாய், 21 ஜூன் 2016 (09:59 IST)
தமிழக சட்டசபை நேற்று கூடியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் கச்சத்தீவு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

 
 
திமுக உறுப்பினர் பொன்முடிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதில் கச்சத்தீவு வழக்கில் ஒரு நாள் வெற்றி பெற்று, கச்சத்தீவு கண்டிப்பாக மீட்கப்படும், அப்போது நீங்கள் எல்லாம் இருந்து அதை பார்க்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கர்ஜித்தார்.
 
1991-ஆம் ஆண்டு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்டே தீருவேன் எனப் பேசினார் என இந்த திமுக உறுப்பினர் பொன்முடி பேசினார்.
 
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, கச்சீத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்பதற்கு திமுக உறுப்பினர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என்றார். திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
 
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுகவும்,  அன்றைய முதல்வர் கருணாநிதியுமே காரணம் என கூறிய முதல்வர், இந்த கச்சத்தீவு தொடர்பாக தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மற்றும் அந்த வழக்கை அப்போதையை மத்திய அரசு தூக்கி எறிய முயற்சித்ததையும் குறிப்பிட்டார்.
 
1974-இல் கச்சத்தீவு கொடுத்த போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிதான் முடிவு செய்யப்பட்டது என பொன்முடி பேசினார். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, அனைவரும் ஒப்புக் கொண்ட முடிவின் படிதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்றால் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றே அர்த்தம். அப்படியானால் நான் ஏன் மீட்கவில்லை என்று என்னைப் பார்த்து ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.
 
இந்த பிரச்சனையில் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் தான் செய்து வருவதாகவும், கடந்த காலங்களில் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார் முதல்வர் ஜெயலலிதா.
 
மேலும், இந்த வழக்கில் ஒரு நாள் வெற்றி பெற்று, கச்சத்தீவு கண்டிப்பாக மீட்கப்படும். அப்போது நீங்கள் எல்லாம் இருந்து அதை இருந்து பார்க்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசினார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :