வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (12:16 IST)

விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவார் : கருணாநிதி நம்பிக்கை

திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 

 
திமுகவுடனான கூட்டணி குறித்து நாளுக்கு நாள் ஒவ்வொரு ஊகச்செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிப்பு வெளியிடாமல் வேடிக்கை பார்க்கிறார் விஜயகாந்த்.
 
விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க இந்த கட்சிகள் படாத பாடுபடுகிறது. ஆனால் இதனை பயன்படுத்தி விஜயகாந்தும் அமைதி காத்து நாளுக்கு நாள் தனது டிமாண்டை அதிகப்படுத்தி வருகிறார். ஆனால் மக்கள் மத்தியில் விஜயகாந்த் இப்படி இழுத்தடித்து வருவது அவரை பற்றிய தவறான யூகங்களை ஏற்படுத்துகிறது.
 
திமுக கூட்டணி தரப்பில், ஸ்டாலின், கருணாநிதி, இளங்கோவன் என அழைப்பு விடுத்து வருகின்றனர். மக்கள் நல கூட்டணி சார்பில் வைகோ, திருமா., என அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுத்து வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் உட்பட பல நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
பாஜக-வின் தமிழக பொருப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இரண்டு முறை விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இன்னமும் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், திமுக-தேமுதிக கூட்டணி ஏன் இழுபறியில் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? என ஒரு நிருபர் கேட்டார். அதற்கு கருணாநிதி  ‘பதில் கூற விரும்பவில்லை’ என்று மழுப்பலாக பதில் கூறினார். அதற்கடுத்து தேமுதிக, திமுக கூட்டணியில் இணையும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என அந்த நிருபர் கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த கருணநிதி “விஜயகாந்த் நிச்சயம் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.