வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 27 ஜூன் 2014 (16:25 IST)

அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி

விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப்  பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்: 
 
ஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி நாளுக்கு நாள் கொடிய விஷம்போல் ஏறிக் கொண்டே போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை  மக்கள் அளித்து விட்டார்கள் என்ற மமதையில் அதிமுக ஆட்சியினர் மக்கள் படும் வேதனைகளை எண்ணிப் பார்க்கவே மறுக்கிறார்கள். அவர்களுக்குள்ள முதல் கவலை பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? மத்தியில் யாரையாவது பிடிக்கலாமா? யாராவது உதவிட முன் வருவார்களா? அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை என்பது பற்றித்தான். திமுக ஆட்சியில் இருந்தபோது விலைவாசி பற்றி எத்தனை அறிக்கைகளை விட்டார்கள்?  இப்போது கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. ஏன், காய்கறி விலையில் தொடங்கி,  எதையெடுத்தாலும் விலை உயர்வுதான் .அதைப்பற்றிக் கவலைப்பட்டு, இந்த ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுக்க முன் வருகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். 14.10.2007ல் ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்தார். 
 
அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் சிமென்ட், மணல், செங்கல், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்கள் என்ன விலை விற்றன? ஆனால் திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு இவை விலை உயர்ந்து விட்டன என்று சுட்டிக்காட்டி, இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக கட்டுமானத் தொழில் நலிவடைந்து விட்டதோடு, இதையே நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டு, அதற்காக 15.10.2007 இல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை மக்கள் மறந்திருப்பார்கள் என்றோ அல்லது யார் நினைவூட்டப் போகிறார்கள் என்றோ அதிமுக  ஆட்சியினர் இன்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஜெயலலிதா அவ்வாறு அறிக்கை விட்டபோது, சிமென்ட் விலை ரூ.270  என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விலையைக் குறைக்க திமுக ஆட்சியில்  எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன தெரியுமா? சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிபர்களை அழைத்துப் பேசினோம். 
 
விலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதனையேற்று சிமென்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு ரூ.20 குறைக்க ஒப்புக் கொண்டார்கள். அப்போதே அது செய்தியாக வெளிவந்தது. சிமென்டை கொள்முதல் செய்து, ஒரு மூட்டை சிமென்ட் சலுகை விலையில் ரூ.200 வீதம் விற்பனை செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. 2007 - 2008 இல், 31.3.2008 வரை 48,496 மெட்ரிக் டன் சிமென்டும் 2008 - 2009 இல் 5 லட்சத்து 63 ஆயிரத்து 955 மெட்ரிக் டன்னும் 2009 - 2010இல் 9 லட்சத்து 79 ஆயிரத்து 330 மெட்ரிக் டன்னும்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக மக்களுக்கு  விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அரசே தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை குறைத்து விற்க நடவடிக்கை எடுத்ததால், வெளிச் சந்தையிலும் சிமென்ட் விலை கணிசமாகக் குறைந்தது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? எந்த சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தையாவது அழைத்து விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா? மதுவகைகளின் விலையை உயர்த்திட மறைமுக பேரத்தில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறதே தவிர, சிமென்ட் விலை உயர்வு பற்றி அவர்களுக்கு என்ன கவலை? திமுக ஆட்சியில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.200 என்று விற்கப்பட்ட போதே, அதற்காகப் போராட்டம் நடத்த அறிக்கை விட்ட இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தற்போது சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.340 என்றும், ரூ.350 என்றும் விற்கப்படுகின்ற இந்த நேரத்தில் அதைக் குறைக்கவும், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றிடவும் எடுத்த நடவடிக்கை என்ன? கட்டுமான பொருள்களின் இந்த விலை உயர்வு பற்றி,அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் வெளியிட்ட செய்தியில், கடந்த 10 நாட்களில் சிமென்ட், ஜல்லி, செங்கல் போன்ற அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலை 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை தற்போது மூட்டைக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளது. 
 
சாதாரணமாக வீடு கட்டுபவர்கள் சதுர அடி ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விலை உயர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது. அரசுத்துறை ஒப்பந்தங்களில் குறிப்பாக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் இந்த விலை உயர்வுக்கு முன் போட்ட ஒப்பந்தங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்கள் 19 முதல் 90 சதவீதம் வரை அதிகமாக செலவு செய்தால்தான் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பணிகளை கடந்த 10 நாட்களாக தொடர முடியாத தேக்க நிலை உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூ.70 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜல்லிகள் விலை 30 சதவீதமும், மணல் விலை 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரு சதுர அடிக்கு ரூ. 300  முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. 
 
இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் வாங்கும் வீடுகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கூடுதலாக செலவிட வேண்டும். சிமென்ட் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், இங்குள்ள உற்பத்தியாளர்களை அழைத்து பேசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உண்ணாவிரதம் முதலான போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த அறிக்கை வெளி வந்து எத்தனை நாட்களாகிறது? அரசாங்கம் ஏதாவது இது பற்றிச் சிந்தித்ததா? அக்கறை செலுத்தியதா? திமுக ஆட்சியில் சிமென்ட் நிறுவன அதிபர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து நான் பேசி, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததுபோல் தற்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க மனம் இல்லையா? மார்க்கம் தெரியவில்லையா? சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது, ‘ சிமென்ட், மணல், ஜல்லி விலை உயர்வால், அனைத்து வகை கட்டுமானப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கட்டுமானப் பணிக்கான சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது‘ என்று தெரிவித்திருக்கிறார். தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுமென்று தெரிவித்திருக்கிறார்களே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா? இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம், இனி விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் பதிலா? அம்மா உணவகங்களையும், மருந்தகங்களையும் திறந்து வைத்து, உப்பு வியாபாரத்தையும் நடத்திவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்களா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.