செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 14 மே 2015 (19:38 IST)

நீதிபதி கணிதப் பிழைகளை சரி பார்க்கலாம்; வேறு எதையும் செய்யக் கூடாது - ராமதாஸ்

ஜெயலலிதா வழக்கில் கணிதப் பிழைகளை சரி செய்வதைத் தவிர, வேறு எந்தவிதமான திருத்தத்தையும் நீதிபதி குமாரசாமி செய்ய அவரை அனுமதிக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வருவாய்க்கு மீறிய வகையில் ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கிலிருந்து ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளிகளையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏராளமான சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஏராளமான கணிதப் பிழைகளும், குறைகளும் தீர்ப்பில் நிறைந்துள்ளன.
 
இதனால் ஜெயலலிதாவை விடுதலை செய்து அளிக்கப்பட்டத் தீர்ப்பு நாடு முழுவதும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதையடுத்து இந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களைச் செய்ய நீதிபதி குமாரசாமி முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக அவர் தமது நீதிமன்ற அறையில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகளில் எவ்வாறு திருத்தம் செய்வது? என்பது குறித்து வழிகாட்டுவது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகள் தான்.
 
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 362 ஆவது பிரிவின்படி, ஒரு நீதிபதி ஒரு வழக்கை முடித்து வைத்து தீர்ப்பிலோ அல்லது இறுதி ஆணையிலோ கையெழுத்திட்டு விட்டால், அதன்பின் அவரால் அதிலுள்ள எழுத்துப் பிழை அல்லது கணக்குப் பிழையை சரி செய்வதை தவிர்த்து வேறு எந்த திருத்தமும் செய்ய முடியாது .
 
ஜெயலலிதாவை விடுதலை செய்து வழங்கப்பட்டத் தீர்ப்பில், அவர் தரப்பு 10 கடன்கள் மூலம் ஈட்டிய வருவாயின் கூட்டுத் தொகை ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருப்பதை ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 என்று மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.
 
மாறாக இதுவரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத கற்பனையான வருமானத்தை இந்த வழக்கில் சேர்க்க எந்த நீதிபதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. எனவே, கணிதப் பிழைகளை சரி செய்வதைத் தவிர வேறு எந்தவிதமான திருத்தத்தையும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி செய்ய முடியாது; அவ்வாறு செய்ய அவரை அனுமதிக்கவும் கூடாது.
 
எனவே, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் ஏற்கனவே அளிக்கப்பட்டத் தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி எந்தத் திருத்தத்தை செய்வதாக இருந்தாலும் அதை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா தரப்பினர், கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியன்சாமி ஆகியோரின் வாதங்களையும் கேட்ட பிறகே செய்ய வேண்டும்.
 
இதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை விசாரணைக்காக கர்நாடக உயர் நீதிமன்றம் பட்டியலிட வேண்டும். இந்த கோரிக்கை குறித்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனும் தங்களின் வழக்கறிஞர்கள் மூலம் நீதிபதி குமாரசாமியிடம் உடனடியாக முறையிட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.