”ஸ்டாலின் மட்டும் என்ன கூவத்தை சுத்தப்படுத்தினாரா??” எகிறும் ஜெயக்குமார்

Arun Prasath| Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (16:14 IST)
ஸ்டாலின் வெளிநாடு சென்ற போது கூவம் சுத்தமானதா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பினார். அவரை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, நிலோபல் கஃபில் ஆகியோரும் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றனர். இதனிடையே தலைவர் ஸ்டாலின், “தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியது” என கேலியாக விமர்சனம் செய்தார்.

மேலும் முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கூறினார். அதற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினுக்கு வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கையுடன் கூடவே வெள்ளரிக்காயையும் சேர்த்து தருகிறோம் என கேலியாக பதிலளித்தார். மேலும் வெள்ளை மனசுக்காரருக்கு வெள்ளையறிக்கை தேவையில்லை, என அமைச்சர் ஆர்,பி,உதயகுமார் பதிலளித்தார்.

இந்நிலையில் ஸ்டாலினின் வெள்ளை அறிக்கை வெளியிட கோரியதை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் கூவத்தை சுத்தப்படுத்த முக ஸ்டாலின் வெளிநாடு சென்றார். அப்போது கூவம் சுத்தமாகியதா என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருணாநிதியும் ஸ்டாலினும் கூட தனிப்பட்ட காரணங்களுக்காக பலமுறை வெளிநாடு சென்றுள்ளார்கள், அது தொடர்பாக ஸ்டாலின் வெள்ளை மனதுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.

ஸ்டாலினின் விமர்சனத்திற்கு தொடர்ந்து அமைச்சர்கள் இவ்வாறு பதிலடி தந்து கொண்டிருப்பது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :