வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (07:46 IST)

மின்விசிறிகளில் மறைத்து வைத்த நகைகள்: கண்டுபிடித்து அள்ளிச் சென்ற திருடர்கள்

புதுச்சேரியில் வீட்டின் மின்விசிறிகளில் மறைத்து வைத்திருந்த நகைகளை திருடர்கள் கண்டுபிடித்து திருடிச் சென்றுள்ளனர்.
 
புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். 34 வயதுடைய இவர் காரைக்காலில் புதுவை அரசின் கால்நடைத்துறையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரளா. இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணியாற்றி வருகிறார். 
 
இவர்கள் குடும்பத்துடன் கடந்த 17 ஆம் தேதி இரவு திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். திருப்பதிக்கு செல்லும் முன்பு முருகன் தன்னிடம் இருந்த நகைகளை பாதுகாக்க விரும்பி, அவற்றை தனது வீட்டில் உள்ள, மின்விசிறிகளின் மேல் உள்ள ‘கப்’ க்குள் பதுக்கி வைத்தார். 
 
நகைகள் அதில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க அதன் மீது டேப்பை போட்டு ஒட்டியுள்ளார். அதன்பின் திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் நேற்று அதிகாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார்.
 
அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் அறைக்குள் சென்றபோது அங்கு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறிக் கிடந்தன. இதனால் பதறிப்போன அவர் நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்தார். 
 
நகைகளை மறைத்துவைத்திருந்து, அந்த மின்விசிறிகளின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டிருந்தன. மின்விசிறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டு அதன்மீது ஒட்டபட்டிருந்த டேப்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தன. அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 85 பவுன் நகைகளைக் காணவில்லை. 
 
அந்த வீட்டு உரிமையாளர் முருகன், திருப்பதி செல்வதை அறிந்த திருடர்கள் கதவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால் அந்த கும்பல் அனைத்து மின்விசிறிகளிலும் டேப் சுற்றப்பட்டிருப்பதைப் பார்த்து, சந்தேகத்தோடு கவனித்து அதை பிரித்து பார்த்து நகையை திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறை உதவி ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து, நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார். 
 
மேலும், திருட்டு நடந்த அந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். அவற்றை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
 
நகைகளைப் பாதுகாக்க எண்ணி மின் விசிறியில் மறைத்து வைத்திருந்த போதும் அதை மோப்பம்பிடித்து திருடிச் சென்ற சம்பவம் அந்த குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.