வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (11:38 IST)

ஆசிரியையின் கழுத்தை அறுத்து நகைகள் கொள்ளை

ஒட்டன் சத்திரம் அருகே ஆசிரியையின் கழுத்தை அறுத்து நகைகள் கொள்ளையடுத்துச் சென்றனர்.
 
ஒட்டன் சத்திரம் அருகேயுள்ள கே.வி.பி. நகரில் வசித்து வரும் அன்னலெட்சுமி, கள்ளிமந்தயம் அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சம்பவத்தன்று இரவு, அன்னலெட்சுமிக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை.
 
வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்புறம் தாழிடப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பின்புற கதவு வழியாக சென்றபோது கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே படுக்கை அறையில் அன்னலெட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
 
இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து விஜயரங்கன் காவல் துறையினரிடம் தெரிவிக்கும்போது, நான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் செம்பில் தண்ணீர் இருந்தது.
 
எனது மனைவி எப்போதும் பள்ளிக்கு செல்லும்போது மட்டுமே தங்க நகை அணிந்திருப்பார். வீட்டிற்கு வந்ததும் அதனை கழற்றி வைத்து விட்டு கவரிங் நகையை அணிந்து கொள்வார். ஆனால் கொலை செய்யப்பட்டபோது அவரது கழுத்தில் நகை இல்லை. பீரோ திறந்து இருந்தது. ஆனால் லாக்கரை திறக்க முடியாததால் பணம் திருடு போகவில்லை.
 
நன்கு அறிமுகமான நபரே ஈடுபட்டு இருக்க வேண்டும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எனது மனைவி நான் வீட்டில் இல்லாத நேரத்தில் கதவை பூட்டியே வைத்திருப்பார். எங்கள் வீட்டு மாடியில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது.
 
நேற்று மாலையில் கொலை செய்யப்பட்ட போது நாய் குரைத்து கொண்டே இருந்தது. ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. கொலையாளி வீட்டு காம்பவுண்ட் சுவரில் இருந்து ரத்தக்கறையுடன் தப்பித்து சென்ற தடயம் உள்ளது என்று தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராமன், காவல்துறை ஆய்வாளர் இளவரசு ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்ப நாய் கொண்டு வரப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.