வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2015 (11:38 IST)

முதலமைச்சர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

முன்னவனே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை; கணபதி என்றிடக் காலனும் கைதொழும்; கணபதி என்றிடல் கருமம் ஆதலால்; கணபதி என்றிடக் கவலை தீருமே''

என்ற திருமந்திரத்தில், கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

வினை தீர்க்கும் தெய்வமான விநாயகர் பெருமான் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, முதன்மை கடவுளான விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

பிரணவப் பொருளாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமான், அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வேண்டிக்கொண்டு, மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.