வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2016 (15:20 IST)

எனது வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி - மோடிக்கு ஜெ. கடிதம்

நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்திருப்பதற்காக எனது மனமார்ந்த நன்றி என்று ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், ’’தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘‘ஜல்லிக்கட்டு’’ போட்டியை நடத்த வழி வகை செய்யும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசாணை வெளியிட்டதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த பிரச்சினை குறித்து நான் உங்கள் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு வந்தது, தங்களுக்கு தெரியும். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகளுக்கும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கும் பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
மேலும் 7.8.2015 அன்று நான் உங்களிடம் கொடுத்த அறிக்கையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டப்பூர்வமாக வழிகாண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு, தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நான் உங்களுக்கு 2015 டிசம்பர் 22–ந்தேதி அன்று கடைசியாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
 
நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்திருப்பதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.