வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (12:14 IST)

தமிழக நீர்நிலைகளை ரூ.670 கோடி செலவில் புனரமைக்க, அரசு திட்டம்

தமிழகத்தின் ஆறு, ஏரி, குளம், கால்வாய், அணைகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளைப் புனரமைக்கவும் நவீனப்படுத்தவும் ரூ.670 கோடி செலவில் தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 4ஆம் நாள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
இயற்கை ஆதாரங்களுள் முதன்மையானதாக விளங்கும் நீரினை முறையாகப் பயன்படுத்தும் வகையில், பாசனக் கட்டமைப்புகளை பராமரித்து, புதிய பாசனத் திட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்குவதில் முக்கியப் பங்கினை வகிக்கும் பொதுப் பணித் துறை வாயிலாக எனது தலைமையிலான அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி உள்ளது. பொதுப் பணித் துறை மூலம் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். 
 
1) திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை கிராமத்தில் உய்யகொண்டான் வாய்க்காலின், தலை மதகில் உள்ள மண் போக்கி, அதாவது Sand Vent மற்றும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் ஆகியவை 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மேலும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அரியாற்றின் குறுக்கே உள்ள வடசேரி அணைக்கட்டு, பிராட்டியூர் அணைக்கட்டு, அரியாவூர் அணைக்கட்டு மற்றும் அதன் வழங்கு வாய்க்கால், புங்கானூர் அணைக்கட்டு, இனாம்குளத்தூர் அணைக்கட்டு மற்றும் அதன் வழங்கு வாய்க்கால், மணப்பாறை வட்டம் அரியாற்றின் குறுக்கே உள்ள 7 அணைக்கட்டுகள் மற்றும் சமுத்திரம் மரவனூர் ஏரிகள் 16 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவிலும்; திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொத்தமங்கலம் ஆற்றின் குறுக்கே உள்ள கொத்தமங்கலம் அணைக்கட்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், முசிறி மற்றும் துறையூர் வட்டங்களில் உள்ள 3 ஏரிகள் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இது தவிர, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேலணையின் கீழ்ப் புறம் காவேரி ஆற்றின் வலது கரையைப் பாதுகாக்கும் பணி 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 
 
2) தேனி மாவட்டத்தில் உள்ள 18ஆம் கால்வாயானது, வைரவனார் அணைக்கட்டின் மேற்புறம் அமைந்துள்ள தலை மதகிலிருந்து துவங்கி, சுமார் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு, பாசன வசதி அளித்து வருகிறது. இந்தக் கால்வாயை, உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ரெங்கனாதபுரம் கிராமத்தில் உள்ள சுத்த கங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து, கோட்டக்குடி ஆறுடன் இணைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரி வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 18ஆம் கால்வாயினைச் சுத்த கங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரையில் நீட்டித்து, கோட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
3) தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமத்தில் புது அணை, ஒட்டணை, குடமுருட்டி அணை, பிரம்பு அணை முக்காவூர் பிரிவணை, கெங்குவார்பட்டி கிராமத்தில் உள்ள வைரவன் அணைக்கட்டின் வழங்கு வாய்க்கால் ஆகியவை 7 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், சிலமலை, சில்லமரத்துப்பட்டி, தொம்புச்சேரி, பொட்டிபுரம் கிராமங்களில் உள்ள எரமன்குளம் அணைக்கட்டு, தம்பிரான்குளம் அணைக்கட்டு, அம்மாகுளம் அணைக்கட்டு, எலுப்ப மரத்து அணைக்கட்டு, சென்னைய கௌண்டன்பட்டி மற்றும் போசிகௌண்டன் அணைக்கட்டு, போடி கிராமத்தில் உள்ள சாமி வாய்க்கால் அணைக்கட்டு ஆகியவை 3 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், குன்னூர் கிராமத்தின் அருகே உள்ள குன்னூர் அணைக்கட்டின் வரத்துக் கால்வாய் 8 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்படும். இது தவிர, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், உத்தமபாளையம் மற்றும் கோகிலாபுரம் கிராமத்தில் உள்ள தாமரைக்குளம் வரத்து கால்வாய் மற்றும் அதன் கண்மாய் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும். 
 
4) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு கிராமம் அருகே உள்ள பரப்பலாறு அணை 1974 ஆம் ஆண்டு 200 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீர் தேக்கி வைக்கக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கமானது மலை சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதால், வண்டல் மண் படிந்து, தற்போது அணையின் கொள்ளளவு 120 மில்லியன் கனஅடியாகக் குறைந்துள்ளதன் காரணமாக, குடிநீருக்கும், விவசாயத் தேவைக்கும் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் பரப்புப் பகுதியில், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அசல் கொள்ளளவுக்கு மீளக் கொண்டுவரும் திட்டம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

5) திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள நரசிங்கபுரம் ராஜா வாய்க்கால், கொடகனாற்றின் கிளை நதியான பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள அணைக்கட்டின் வலது புறக் கரையில் இருந்து தொடங்கி, 3,950 மீட்டர் தூரம் ஓடி, தாமரைக் குளம், போலசமுத்திரம், வாடிகுளம், செங்கட்டான் குளம், சொட்டான் குளம், பள்ளக் குளம், பெரியகுளம், கொங்கறு குளம், மன்னவராதி கண்மாய் மற்றும் புளியங்குளம், அத்திகுளம் ஏந்தல், ரங்கசமுத்திரம் ஆகிய குளங்களுக்கு, பாசன பயன் அளிக்கிறது. இவ்வாய்க்கால் தூர்ந்துவிட்டதால், நேரடி ஆயக்கட்டுகள் மற்றும் குளங்களுக்குத் தேவையான நீர் வழங்க இயலாத நிலை உள்ளது. எனவே, இவ்வாய்க்காலில் மேற்பூச்சு மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
6) ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், பவானி ஆற்றின் குறுக்கே மிகப் பழமையான கொடிவேரி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து பிரியும் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்கள் சுமார் 100 வருடத்திற்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளன. 77 கிலோ மீட்டர் நீளமுள்ள தடப்பள்ளி கால்வாய் 17,654 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளித்து வருகிறது. 32 கிலோ மீட்டர் நீளமுள்ள அரக்கன்கோட்டை கால்வாய் 6,850 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளித்து வருகிறது. இக்கால்வாய்களின் படுகை மட்டம் வண்டல் படிவங்களால் தூர்ந்து போய் இருப்பதாலும், நீர்க் கசிவு அதிகமாக இருப்பதாலும், பவானிசாகர் அணையிலிருந்து விடுவிக்கப்படும் நீர், கடைமடை பகுதிக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. இந்தக் கால்வாய்களின் செயல்திறனை அதிகப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, தலைமதகு பகுதியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்பூச்சு மற்றும் புனரமைக்கும் பணிகள் நடப்பாண்டில் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
7) பெரியாறு பிரதான கால்வாய், பெரியாறு வைகை வடிநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கால்வாய் 58 கிலோ மீட்டர் பயணித்து 12 பிரிவு வாய்க்கால் மற்றும் 64 கிளை வாய்க்கால் மூலம் 68,334 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்ட இக்கால்வாய்களின் மேற்பூச்சு சிதிலம் அடைந்து, நீர் கடத்தும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், கடைமடைப் பகுதிக்கு போதிய நீர் சென்றடைவதில்லை. என்னுடைய அரசின் விவேகத்துடன் கூடிய சீரிய முயற்சியால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம், தற்காலிகமாகக் குறைக்கப்பட்ட 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் நீரை உரிய வகையில் பயன்படுத்த, பெரியாறு பிரதான கால்வாயின் கிளைக் கால்வாய்களைப் புனரமைப்பு செய்வது மிக அவசியமாகிறது. முதற்கட்டமாக, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1ஆவது பிரிவு வாய்க்கால், 2ஆவது பிரிவு வாய்க்கால், 3ஆவது பிரிவு வாய்க்கால் 4ஆவது பிரிவு வாய்க்கால், 12ஆவது பிரிவு வாய்க்கால் மற்றும் பெரியார் நீட்டிப்புக் கால்வாய் ஆகியவற்றில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்பூச்சு மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
8) திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திலுள்ள கண்டலேறு பூண்டி கால்வாய் 177.105 கிலோ மீட்டர் நீளத்தில், கிருஷ்ணா நதி நீரை, சென்னை மாநகர குடிநீர் தேவைக்காகக் கொண்டு வர அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில், இக்கால்வாயின் நீளம் 25.275 கிலோ மீட்டர் ஆகும். மழையினால், இக்கால்வாயில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டு, மண் சரிவுகள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன. இதனால் இக்கால்வாயின் நீர் கடத்தும் திறன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சரிவுகளைச் சரி செய்து கரைகளைப் பலப்படுத்த 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மொத்தத்தில் 670 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் என்னால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் ஆயக்கட்டு நிலைப்படுத்தப்பட்டு, கூடுதல் பாசன வசதி ஏற்படுத்தப்படுவதால் வேளாண் உற்பத்தி அதிகரித்து, வேளாண் பெருங்குடி மக்கள் வாழ்வு சிறக்க வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் 
கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.