1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (21:08 IST)

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு கதவணை, 17 தடுப்பணைகள் கட்டப்படும்

தமிழ்நாட்டில் ரூ.400 கோடி செலவில் ஒரு கதவணையும் 32 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக 17 தடுப்பணைகளும் கட்டப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 4ஆம் நாள், அவர் அறிவித்ததாவது:
 
ஒரு கதவணை
 
மழைக் காலங்களில் காவிரியில் வரப் பெறும் வெள்ள நீரைத் திருப்பி விடுவதற்காக, கொள்ளிடம் ஆறு பிரதானமாக ஒரு வெள்ள நீர்ப் போக்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆற்றில், கீழணை, அதாவது Lower Coleroon Anicut தவிர, எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால், மழைக் காலத்தில் கிடைக்கும் வெள்ள நீர் கீழணைக்குக் கீழ்ப் புறம் சென்று, கடலில் வீணாகக் கலக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினர் வைத்துள்ளனர். 
 
இந்த கோரிக்கையை ஏற்று, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனூர் - குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கீழணையின் கீழ் புறம், 0.6 TMC அடி கொள்ளளவு கொண்ட தலை மதகுகளுடன் ஒரு கதவணை, அதாவது Barrage, 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
17 தடுப்பணைகள்
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அளுந்தூர் கிராமம் அருகே கொத்தமங்கலம் வாரியின் குறுக்கே 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
லால்குடி வட்டம், இருதயபுரம் கிராமம் அருகே நந்தியாற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
மேலரசூர் கிராமம் அருகே, மானோடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், சிறுமருதூர் கிராமம் அருகே, பங்குனி வடிகாலின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
ஸ்ரீதேவி மங்கலம் கிராமம் அருகே, உப்பாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருப்பத்தூர் கிராமம் அருகே, சண்முகா நதி ஓடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வேம்பனூர் கிராமம் அருகே, வெள்ளாற்றின் குறுக்கே 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், குமாரவாடி கிராமம் அருகே, கண்ணூத்து ஓடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
சமுத்திரம் கிராமம் அருகே, மாமுண்டியாறு ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
கருப்பூர் கிராமம் அருகே, கோரையாறு ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
கே. பெரியப்பட்டி கிராமம் அருகே, உப்பாறு வாரியின் குறுக்கே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
பொன்னனியாற்றின் குறுக்கே 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், தண்டலைப் புதூர் கிராமம் அருகே, அய்யாறு ஆற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருத்தியமலை கிராமம் அருகே, திருத்தியமலை ஆற்றின் குறுக்கே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திண்ணக்கோணம் கிராமம் அருகே, அய்யாறு ஆற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கொல்லம்பட்டி கிராமம் அருகே, குண்டாறு ஆற்றின் குறுக்கே 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கும்பக்குடி கிராமம் அருகே, காட்டாற்றின் குறுக்கே 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் 
 
என மொத்தம், 32 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக 17 தடுப்பணைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.