வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (18:51 IST)

தமிழகத்தைக் கல்லாதோர் இல்லாத மாநிலம் ஆக்க, ஜெயலலிதா புதிய திட்டங்கள்

கல்வி பெறும் வாய்ப்பு, கடைக்கோடி மக்களையும் எட்டும் வண்ணம், பல்வேறு புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இவற்றின் வாயிலாக, கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடையத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
இது தொடர்பாகத் தமிழகச் சட்டப் பேரவையில் 2014 ஜூலை 30 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் அவர் அறிவித்ததாவது-
 
செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 
 
இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 
 
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவதோடு, விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள், வரைபடப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. 
 
இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். 
 
2. அனைத்துப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காகக் கணக்கெடுப்புப் பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கழிவறைகளைக் கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளைப் பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.
 
3. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும். 
 
4. சமூக விழிப்புணர்வினைக் குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
5. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
6. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
7. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், அதாவது  Assistive Devices ஆகியவை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
8. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்குப் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளைக் குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக, பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, அதாவது School Diary with Calendar, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும். 
 
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.