1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : புதன், 6 ஆகஸ்ட் 2014 (17:54 IST)

தே.மு.தி.க.வினர் மீதுள்ள குற்ற வழக்குகள் என்னென்ன? ஜெயலலிதா பட்டியல்

குற்ற நிகழ்வுகளைப் பற்றி, செயின் பறிப்பைப் பற்றி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றிப் பேசுவதற்கு ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு அந்த அருகதை இருக்கிறதா? தே.மு.தி.க.வின் தலைவர் உள்ளிட்ட அவர்களது கட்சியைச் சார்ந்த பலரது நடவடிக்கைகள் அவைக்கு வெளியேயும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும், குற்றம் இழைப்பதாகவும் தான் உள்ளன என்று கூறிய ஜெயலலிதா, அவற்றுள் சிலவற்றைப் பட்டியல் இட்டார். 
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6.8.2014 அன்று நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, தேசிய முற்போக்கு திராவிடக் கழக உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்து ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு: 
 
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.சி. சந்திரகுமார், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து உண்மைக்கு மாறான தகவலை இங்கே பதிவு செய்ய முற்பட்டுள்ளார். 
 
சட்டப் பேரவை என்பது எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளை அமைதியாகவும், ஆணித்தரமாகவும், தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் கூற வேண்டிய இடமாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லும் கருத்துகளை அமைதியாகக் கேட்க வேண்டியதும், எதையேனும் மறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பேரவைத் தலைவரின் அனுமதி பெற்று மறுப்பதும் தான் ஜனநாயக ரீதியான கடமை ஆகும். செயின் பறிப்பு நிகழ்ச்சிகள், குற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது என்று மாண்புமிகு உறுப்பினர் பேசுகிறார். 
 
ஜனநாயக ரீதியாக, ஜனநாயகக் கோட்பாடுகளின்படி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்க வேண்டியது அவர்களின் உரிமை, பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை. ஆனால், குற்ற நிகழ்வுகளைப் பற்றி, செயின் பறிப்பைப் பற்றி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். பேசுவதற்கு அடிப்படைத் தகுதி இருக்கிறதா? 
 
தற்போது சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசும் உறுப்பினர், அவ்வாறு செயல்பட்டுள்ளாரா என்பதை அவரே எண்ணிப் பார்க்க வேண்டும். இதைப் பற்றிப் பேசுவதற்கு தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு அருகதை இருக்கிறதா என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (குறுக்கீடுகள்) ஆதாரங்களோடு சொல்கிறேன். 
 
8.2.2013 அன்று சட்டமன்றப் பேரவையில், வினாக்கள் - விடைகள் நேரத்தின்போது, துணை வினா ஒன்றினை எழுப்ப, மாண்புமிகு தே.மு.தி.க, உறுப்பினர் திரு. க. தமிழழகன் அவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் அனுமதி அளித்து, திரு. க. தமிழழகன் அவர்களும் ஒருசில கருத்துகளை இங்கே எடுத்துரைத்தார். திரு. தமிழழகன் தெரிவித்த கருத்துகளில் உடன்பாடு இல்லை என்றால், மாண்புமிகு பேரவைத் தலைவரின் அனுமதி பெற்று, அதனை மறுப்பதற்கான வாய்ப்பு திரு. சந்திரகுமார் உள்ளிட்ட தே.மு.தி.க, உறுப்பினர்களுக்கு இருந்தும், சட்டமன்றப் பேரவையிலேயே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக தே.மு.தி.க, உறுப்பினர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. மைக்கேல் ராயப்பன் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். இந்தப் பிரச்சனை அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. 
 
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகளைப் பார்வையிட்ட அவை உரிமைக் குழு, திரு. வி.சி. சந்திரகுமார் உள்ளிட்ட ஆறு தே.மு.தி.க, உறுப்பினர்கள் ஒரு வருட காலத்திற்கு அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், தே.மு.தி.க,வைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வருட காலத்திற்கு அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்படும் தீர்மானம், இந்த மாமன்றத்தில் 25.3.2013 அன்று கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து, தே.மு.தி.க.வினரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 
 
இந்த மாமன்றத்திலேயே சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தே.மு.தி.க. கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், குறிப்பாக திரு. வி.சி. சந்திரகுமாருக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை. 

தே.மு.தி.க.வின் தலைவர் உள்ளிட்ட அவர்களது கட்சியைச் சார்ந்த பலரது நடவடிக்கைகள் அவைக்கு வெளியேயும் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாகவும், குற்றம் இழைப்பதாகவும் தான் உள்ளன. இவற்றில் ஒரு சிலவற்றை இந்த மாமன்றத்திற்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். 
 
தே.மு.தி.க,வைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் நல்வழிக் காட்ட வேண்டிய பொறுப்பிலிருக்கும் அக்கட்சியின் தலைவரே மாநிலத்தில் கட்சி சார்பில் நடத்திய பொதுக் கூட்டங்களில் தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசியது சம்பந்தமாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன.

கடந்த 14.10.2012 அன்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவ்வழக்கு தொடர்பாக 1.7.2013 அன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் அக்கட்சியின் தலைவர் ஆஜராக வந்த போது, அவருடன் வந்த தொண்டர்கள் சுமார் 500 பேர் நீதிமன்ற வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்ததுடன், நீதிபதி அழைக்காமலேயே அத்தலைவர் சுமார் 10 பேர்களுடன் வேறு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே நீதிமன்றத்தினுள் நுழைந்து, நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்துள்ளார். அப்போது, வழக்கு நடத்திக் கொண்டிருந்த அரசு வழக்கறிஞர், நீதிபதியிடம் முறையிட, அதுகுறித்து அக்கட்சியின் வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்களைத் தாக்கித் தகராறு செய்து, நீதிமன்ற அலுவலுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 
 
27.10.2012 அன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை நிருபர்கள் தே.மு.தி.க, தலைவரைப் பேட்டி கண்டபோது, தே.மு.தி.க,வினரால் தனியார் தொலைக்காட்சி நிருபர் கீழே தள்ளிவிடப்பட்டார். இது தொடர்பாக தே.மு.தி.க, தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திரு. அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். 
 
தே.மு.தி.க.வின் திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளரான பாலன் (எ) பாலசுப்பிரமணியன் என்பவர் பல கூலிப் படையினருடன் சேர்ந்து உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் வழிபறி, பூட்டியிருக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளையடித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பாலன் (எ) பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொள்ளையடித்த 67 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டதோடு, 67 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன. அவர்கள் செயின் பறிப்பைப் பற்றி பேசுகிறார்கள். மேற்படி சம்பவங்களின் போது பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களும் இரண்டு இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இக்கட்சியின் பாலன் உள்ளிட்ட இருவர் 2.5.2014 அன்று, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
1.5.2013 அன்று திருநெல்வேலி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மாரியப்பன் தனது காரில் நாங்குனேரி சுங்கச் சாவடியைக் கடக்கும் போது சுங்க வரி செலுத்தாமல் தகராறு செய்து, அதைக் கேட்ட பணியாளர்களைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாரியப்பன் கைது செய்யப்பட்டதுடன், குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 
 
மேலும், கடந்த 01.09.2013 அன்று தே.மு.தி.க,வின் பல்லாவரம் நகரச் செயலாளர் அசோக்குமார் என்பவரே, அவரது கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன், தலைமை நிலையப் பேச்சாளர் வளர்பிறை சோழன் உள்ளிட்ட மூன்று பேர் தன்னைத் தாக்கி, 12 சவரன் நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

வேலூர் மாவட்டம், தக்கோலம் ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக 20.7.2014 அன்று காலை தக்கோலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைக்கப்பெற்று, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் தலைமைக் காவலர் கனகராஜ் ஆகியோர் தக்கோலம் ஆற்றிற்கு இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்று, அங்கு டிராக்டர் ஒன்றில் மணல் கடத்திக் கொண்டிருந்தவர்களைப் பிடிக்க சென்ற போது, தக்கோலம் பேரூராட்சியின் 6ஆவது வார்டு தேமுதிக உறுப்பினர் செண்பகவல்லி என்பவரது மகன் சுரேஷ், காவல் துறையினரைக் கண்டவுடன் டிராக்டருடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். தலைமை காவலர் கனகராஜ், சுரேஷைக் கீழே இறக்க முற்பட்ட போது, அவர், தலைமைக் காவலரைக் கீழே தள்ளிவிட்டு, டிராக்டரை இயக்கி கனகராஜ் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளார். இது குறித்து, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுரேஷ் கைது செய்யப்பட்டார். 
 
17.6.2014 அன்று கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க, கிழக்கு மாவட்டப் பொருளாளர் கவாஸ்கர் என்பவரின் சகோதரர் ராஜன் என்பவரை இரணியல் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது, அவரை விடுவிக்கக் கோரி, தே.மு.தி.க, கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெகன்நாதன், கவாஸ்கர் மற்றும் சிலர் காவல் நிலையம் சென்று, காவலர்களிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளைப் பேசி, மேஜை நாற்காலிகளைச் சேதப்படுத்தி எதிரி ராஜனைக் கூட்டிச் செல்ல முயன்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜெகன்நாதன், கவாஸ்கர், ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 
 
17.7.2014 அன்று சென்னை, செங்குன்றம் காவல் நிலையத்தில் பழைய அலுமினிய ஸ்கிராப் ஏற்றப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியைப் புழல் ஒன்றிய தே.மு.தி.க, செயலாளர் முருகன், அவரது மகன் உள்ளிட்ட சிலர் மேற்படி பொருட்களுடன் லாரியைத் திருடிச் சென்று அருகிலிருந்த கிடங்கு ஒன்றில் பொருட்களை இறக்கி கொண்டிருக்கும் போது, கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். 
 
கடந்த 4.9.2013 அன்று சென்னை, துறைமுகத்திலிருந்து மடிக் கணினிகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை தே.மு.தி.க.வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் மேற்படி லாரியை ஒரு கிடங்கிற்கு கொண்டுச் சென்று, மடிக் கணினிகளைத் திருடிச் சென்றது தொடர்பாக பண்ணைக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சத்தியநாராயணன் உள்ளிட்ட 10 எதிரிகளைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 222 மடிக்கணிகள் மற்றும் 954 கணினிகளையும் கைப்பற்றினர். இன்னும் இருக்கிறது. 
 
தே.மு.தி.க.வின் நீலகிரி மாவட்ட கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணன் என்பவர் கடந்த 10 வருடங்களாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து வந்த நிலையில் 24.5.2014 அன்று, குன்னுhர் தாசில்தார் உத்தரவின் பேரில், கேத்தி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் என்பவர் மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் மரக் கன்றுகளை நடச் சென்ற போது கண்ணன் அவரை ஆயுதங்கள் காட்டி கொலை மிரட்டல் விடுத்து விரட்டியுள்ளார். இது சம்பந்தமாக கேத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கண்ணன் கைது செய்யப்பட்டார். 
 
மதுரை வடக்கு மாவட்ட தே.மு.தி.க, துணைச் செயலாளராக இருந்து வரும் செந்தில்பாண்டி என்பவர், உரிமம் இல்லாத கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய தோட்டாக்களும் வைத்திருந்தது தொடர்பாக, மேலூர் காவல் நிலையத்தில் 14.7.2014 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். 
 
கடந்த 4.2.2012 அன்று தே.மு.தி.க.வின் விழுப்புரம் நகர் மகளிரணிச் செயலாளர் லதா இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்து விற்றது சம்பந்தமாகக் கைது 
செய்யப்பட்டார். 
 
இவை எல்லாம் உண்மை நிகழ்வுகள், வழக்குகள். ஆதாரங்கள் இருக்கின்றன. அவையிலும், அவைக்கு வெளியேயும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும், குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் தே.மு.தி.க.வினர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி இங்கே பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. முதலில் தே.மு.தி.க. உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கை அவைக்கு உள்ளேயும், வெளியேயும் காப்போம் என்ற உறுதிமொழியை அளித்துவிட்டு அதன் பிறகு காவல் துறை மானியத்தின் மீது பேசலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை என்றும், எனது தலைமையிலான ஆட்சி வந்த பிறகுதான், தே.மு.தி.க. உறுப்பினர்கள்மீது வழக்கு போடப்பட்டதாகவும் மாண்புமிகு உறுப்பினர் சந்திரகுமார் இங்கே பேசினார். 14.02.2011 அன்று தற்போதைய மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பூட்டு போட முயன்ற போது, காவல் துறையினர் தடுக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினார். அப்போது காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா உரையாற்றினார்.