1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (14:57 IST)

புதுக்கோட்டையில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய பால் பண்ணை - ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதுக்கோட்டையில் 2 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பால் பண்ணையைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 18.7.2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பால் பண்ணை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கால்நடைத் தீவன ஆலையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். 

 
தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு ஆதாயமான விலை கிடைக்கச் செய்தல், நுகர்வோருக்கு தரமான பாலினை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதுக்கோட்டை மாவட்டப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாலைப் பதப்படுத்தும் நோக்கில் 2 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 35,000 லிட்டர் பால் பதப்படுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பால் பண்ணையை ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 
 
புதுக்கோட்டை மாவட்டப் பால் பண்ணை செயல்பாட்டுக்கு வருவதையடுத்து தமிழகத்தில் அமைந்துள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களிலும் பாலைப் பதப்படுத்தும் பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், திருவள்ளுர் மாவட்டம், காக்களூரில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் வகையிலும், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்குத் தரமான பால் கூடுதலாக கிடைத்திடும் வகையிலும், தேசிய மேலாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய சிறப்பு புரதச் சத்து ஈடு செய்யும் திட்டத்தின் கீழ் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பால் பண்ணை; ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கால்நடைத் தீவன ஆலையில் 3000 மெட்ரிக் டன் கச்சாப்பொருட்கள் மற்றும் 300 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்ட தீவனங்களை இருப்பு வைக்கும் கொள்ளளவு கொண்ட கிடங்கு ஏற்கெனவே அமைந்துள்ளது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கும், தமிழ்நாடு அரசு கால்நடைப் பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளுக்கும் கால்நடைத் தீவனங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட ஏதுவாகத் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3000 மெட்ரிக் டன் கச்சாப் பொருட்கள் மற்றும் 350 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்ட தீவனங்களை இருப்பு வைக்கும் அளவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கிடங்குகள் ;  என மொத்தம் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் பண்ணைகள் மற்றும் கிடங்குகளை ஜெயலலிதா திறந்து வைத்தார். 
 
புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பால் பண்ணை மூலம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 45,000 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். மேலும் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பாலின் அளவு நாளொன்றுக்கு 10,000 லிட்டரிலிருந்து 20,000 லிட்டராக உயரும். திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் அமைந்துள்ள பால் பண்ணை புனரமைக்கப்பட்டதன் மூலம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 10,500 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். மேலும் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பாலின் அளவு நாளொன்றுக்கு 22,000 லிட்டரிலிருந்து 30,000 லிட்டராக உயரும். ஈரோடு கால்நடைத் தீவன ஆலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிடங்குகள் மூலம் 11,503 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள். 
 
இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் தலைவர் அ. மில்லர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., பால்வளத் துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுனீல் பாலீவால், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
இதனைத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.