வேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதாவிற்கு தைரியம் இருக்கிறதா? - பிரேமலதா சவால்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 10 மார்ச் 2016 (21:33 IST)
234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதாவிற்கு தைரியம் இருக்கிறதா என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
 
 
இன்று ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, “தமிழகத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேறாத சமயத்தில் 50% உள்ளாட்சியில் வாய்ப்பு தருவதாக சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா சொன்னது எதுவும் நடக்கவில்லை. 110 விதியின் கீழ் ஜெயலலிதா சொன்ன எல்லாம் அறிவிப்புகளாகவே உள்ளன.
 
தேமுதிகவின் தற்போதைய இலக்கு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதுதான். அடுத்த இலக்கு 50%. 2016 தேர்தலில் விஜயகாந்த் என்ன அறிவிக்கப் போகிறார்? 3 மாதங்களாக தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
 
விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பதற்கு முன், ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? இதை சவாலாகவே விடுக்கிறேன். வாய் மூடி மௌனியாக பேச திராணியற்று, முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்தின் தயவு இல்லாததால் தான் வேட்பாளர் பட்டியல் கூட அதிமுகவால் வெளியிட முடியவில்லை.
 
ஜெயலலிதா என்றாலே மாயை. அந்த மாயை இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறது? அந்த சாயம் வெளுக்கப் போகிறது. தேர்தல் முடிவுகள் மூலம் ஜெயலலிதாவுக்கு பூஜ்ஜியம் போட்டு பாடத்தைப் புகட்டுவார்கள்.
 
தேர்தல் நேரத்தில்தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்?
 
ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தவர்கள் மேல் பழியைப் போடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு தேவை தேர்தல். ஓட்டு. மீண்டும் ஆட்சியில் அமர்ந்து ஊழல் செய்து தமிழகத்தை சுடுகாடு ஆக்கணும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணம்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :