செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2015 (06:18 IST)

ஜூன் 22: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜூன் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது.


 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
 
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விரைந்து முடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து, இந்த வழக்கு, பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி, சொத்து குவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுமையாக இல்லை. கணக்கீட்டில் 10 சதவீதம் வரை அதிகம் இருக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பை உதாரணம் காட்டி ஜெயலலிதா உள்பட 4 பேரையும் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 
இதையடுத்து, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு, தமிழக அரசியல் கட்சிகளால் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.  அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை விக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக,  பி.வி.ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது.
 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து தயாரித்துள்ள மேல்முறையீடு மனு ஜூன் 22 ஆம் தேதி (திங்கள் கிழமை) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு முழு வீச்சுடன் செய்து முடித்துள்ளது.
 
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.