1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 3 ஜனவரி 2016 (11:25 IST)

ஏ.பி.பரதன் மறைவிற்கு ஜெயலலிதா, ராமதாஸ் இரங்கல்

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

 
அர்தென்டு பூஷன் பரதன் எனப்படும் ஏ.பி.பரதன் [92] கடந்த மாதம் 7ஆம் தேதி திடீர் பக்கவாதத்தால் டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.13 மணிக்கு மரணமடைந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
ஜெயலலிதா அறிக்கை:
 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்து கொள்கிறேன்.
 
தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில் ஏ.பி.பரதன் தன்னலம் கருதாது, உழைக்கும் வர்க்கத்துக்கும், ஏழைகளுக்கும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கும் பாடுபட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனைகள் ஏற்பட்ட போது, பல்வேறு அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் அவருடைய பேச்சுவார்த்தை திறமை முக்கிய பங்கு வகித்தது.
 
அரசியல் வாழ்வில் நாகரீகமாகவும், தன்னலமற்ற பணிகளையும் மேற்கொண்டவர். அவரோடு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு தருணங்களில் என்னுடைய இல்லத்துக்கு அவர் வந்திருக்கிறார். அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.
 
ராமதாஸ் அறிக்கை:
 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஏ.பி.பரதன் உடல் நலக்குறைவால் தில்லியில் இன்று இரவு காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன். 
 
இப்போதைய வங்கதேசத்தில் உள்ள ஷிலெட் கிராமத்தில் பிறந்த பரதன் நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 4.5 ஆண்டு காலம் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்த பரதன் அடித்தட்டு மக்களுக்காகவே தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தார்.
 
ரயில்வே தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காக போராடி ஏராளமான உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர். பரதனின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
 
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுவுடைமைத் தோழர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.