வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 13 ஜனவரி 2016 (17:47 IST)

ஜெயலலிதா அடுத்தவர் பொருளில் தன்படத்தை ஒட்டி, ஸ்டிக்கர் அரசாங்கத்தை நடத்துகிறார் - விஜயகாந்த் தாக்கு

கரும்பின் ஆதார விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறி அடுத்தவர் பொருளில் தன்படத்தை ஒட்டி, ஸ்டிக்கர் அரசாங்கத்தை நடத்துகின்ற ஜெயலலிதா அரசின் தவறுகளை மறைத்திடுவதற்காக செய்யப்படும், ஸ்டிக்கர் ஓட்டும் செயலாகவே தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
கரும்பு விவசாயிகள், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 கேட்டு போராடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலிதா ரூபாய் 2850 என ஆதாரவிலையை அறிவித்துவிட்டு, இது கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்குமென கூறி இருப்பது நகைப்பிற்குரியதாகும். 
 
மத்திய அரசு ஆதார விலையை அறிவித்து பல மாதங்களுக்குப் பிறகு, கரும்பு அரவை பருவம் துவங்கி பலநாட்களுக்குப் பிறகு, தற்போதுதான் மாநில அரசின் ஆதார விலையை அதிமுக அரசு அறிவித்துள்ளது. 
 
தற்போது அறிவித்துள்ள இந்த ஆதாரவிலை கரும்பு விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. 2011 - 2012ல் மத்திய அரசு அறிவித்த ஆதார விலை ரூபாய் 1450 உடன் ரூபாய் 650ஐ சேர்த்து, ஒரு டன்னுக்கு ரூபாய் 2100ஆக வழங்கப்பட்டது. 
 
மத்திய அரசு ஆதார விலையை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வழங்கியபோது, மாநில அதிமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 100 வீதம் குறைத்து, 2014 - 2015ல் மத்திய அரசு அறிவித்த ஆதார விலை ரூபாய் 2200 உடன் ரூபாய் 350ஐ சேர்த்து, ஒரு டன்னுக்கு 2550ஆக வழங்கப்பட்டது. 
 
இப்படி ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கு ஆதாரவிலையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சியில் குறைத்துக்கொண்டே வந்து, கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல், வேறு யாருக்கு கொடுக்கப்போகிறார்? 
 
சேற்றில் கால் வைக்கும் உழவனுக்கு அள்ளிக்கொடுத்தால் தானே, ஆட்சியாளர்கள் சோற்றில் கைவைக்கமுடியும். இதுபோன்று யாருக்கும் கொடுக்காமல் ஆட்சி செய்து என்ன சாதிக்கப்போகிறார் ஜெயலலிதா. இதுதான் அவருடைய உண்மையான சுயரூபமாகும். 
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு, தானொரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தான் ஆட்சியில் இருக்கும்போது மாநில அரசின் ஆதார விலையை ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 100 என்ற விகிதத்தில் குறைத்துக்கொண்டே வந்தவர், தற்போது மாநில அதிமுக அரசின் ஆதாரவிலையாக ரூபாய் 550 என அறிவித்திருப்பது, மீண்டும் தமிழகத்தில் தான் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்கின்ற சுயநலமே தவிர கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அறிவித்திருக்கிறாரா என்றால் இல்லையென்றே சொல்லமுடியும்.
 
ஏற்கனவே கடந்த ஆண்டு மாநில அதிமுக அரசு அறிவித்த ஆதார விலையான ரூபாய் 350ஐ, சர்க்கரை ஆலைகள் இதுவரையிலும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றும், சுமார் 1500 கோடி ரூபாய் பாக்கித்தொகையை தராமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதை பெற்றுத் தருவதற்குக்கூட அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
இந்த நிலையில் 2015 - 2016ஆம் ஆண்டுக்கு அறிவித்த மாநில அதிமுக அரசின் ஆதாரவிலை ரூபாய் 550ஐ, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு எப்படி வழங்கும். “மீனுக்கு உடம்பும், பாம்புக்குத் தலையும் காட்டும் விலாங்குமீன்” போன்று, கரும்பு விவசாயிகளையும், சர்க்கரை ஆலைகளையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. 
 
அதனால் விவசாய பெருமக்கள் இனியும் ஜெயலலிதாவை நம்புவதற்கு தயாராக இல்லை. அடுத்தவர் பொருளில் தன்படத்தை ஒட்டி, ஸ்டிக்கர் அரசாங்கத்தை நடத்துகின்ற ஜெயலலிதாவின் எல்லா செயல்களுமே, அதிமுக அரசின் தவறுகளை மறைத்திடுவதற்காக செய்யப்படும், ஸ்டிக்கர் ஓட்டும் செயலாகவே தெரிகிறது.
 
எனவே அதிமுக அரசு உடனடியாக கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 வழங்கவேண்டும் என்றும், சர்க்கரை ஆலைகளில் நிலுவையிலுள்ள பாக்கித்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக பெற்றுத்தரவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.