வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 9 ஜூலை 2015 (18:11 IST)

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான திமுகவின் மேல்முறையீட்டு மனுவிலும் குறைபாடுகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலையை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவில் 9 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மனுவை திருத்தி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்ப‌ழகன் சார்பில் கடந்த 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
2,000 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகள், மனுவில் பல குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற‌ தலைமைப் பதிவாளர், மனுவில் உள்ள 9 முக்கிய குறைபாடுகளை சரி செய்து, திருத்தப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு திமுக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
அதில், திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் இணைக்கப்பட்டு இருக்கும் பிரமாணப் பத்திரத்தில் கோரப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் விடுபட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆவணங்களை தரவரிசைப்படி குறிப்பிடப்பட‌வில்லை. வழக்கில் அன்பழகன் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் தீர்ப்பாணைகள் முழுமையாக இணைக்கப்படவில்லை. வழக்கு தொடர்பான அரசாணைகள், வழிகாட்டுதல்கள், விசாரணை நீதிமன்றத்தில் முக்கிய குறிப்புகள், அரசு சான்று ஆவணங்கள் மனுவுடன் இணைக்கப்பட‌வில்லை என்பன உள்ளிட்ட 9 குறைபாடுகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
 
திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் மீண்டும் சரிபார்த்த பிறகே குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கப் போகும் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படும்.
 
இந்த நடைமுறைகள் முடிய ஒரு மாத காலம் வரை கால அவகாசம் தேவைப்படும் என்பதால் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகும் என தெரிகிறது.