அதிமுக அரசின் வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது?: விஜயகாந்த் கேள்வி


Suresh| Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2016 (16:31 IST)
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏதும் விதிக்கப்படமாட்டாது என்ற வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழக மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதில் உரிய முறையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க. ஆளும் அரசு தவறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 
அதிமுக அரசு இதுபோன்று சிக்கலான பிரச்சனைகளில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தான்தோன்றிதனமாக, அதிமேதாவிபோல் செயல்படுவதாலேயே, இது போன்ற சட்ட ரீதியான பிரச்சனைகளில் அடிக்கடி சிக்கிக்கொண்டு, தமிழக மக்களின் உரிமையை இழந்து வருகிறது. 
 
அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏதும் விதிக்கப்படமாட்டாது என்ற வார்த்தை ஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது?
 
மதுவிலக்கு, ஹெல்மெட் போன்ற மக்கள் பிரச்சனைகளில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிடாது என்று கருத்து தெரிவிக்கும்போது, அதே பாணியில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டியும், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக்கூட்டியும் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக அரசின் கொள்கை முடிவென ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தால், அதற்கு நிச்சயமாக பலன் இருந்திருக்கும்.
 
ஆனால் இதையெல்லாம் செய்யாமல், மாவட்ட ஆட்சித் தலைவர்களை அனுப்பி வைத்து, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை பார்வையிட வைப்பதும், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதும் போன்ற செயல்களில் அதிமுக அரசு ஈடுபட்டது.
 
மேலும் பாரத பிரதமர் வெளிநாடு சென்றபின், பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நாளில் பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
இதுபோன்று ஒவ்வொரு பிரச்சனையிலும் தமிழக மக்களின் காதில் பூச்சுற்றுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
 
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாக மாறிவிட்டது.
 
எனவே மத்திய, மாநில அரசுகள் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்தி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :