வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:02 IST)

’ஜக்கி வாசுதேவ் யோகியா? துறவியா?’ - சர்ச்சையை கிளப்பும் யோக குரு தங்கராஜ் சுவாமிகள்

ஜக்கி வாசுதேவ், ஆன்மிகத்தை வியாபாரம் செய்வதாகவும், இரவில் ஆன்மிக விழிப்பு என்ற பெயரில் 2 லட்ச ரூபாயும், பள்ளிக் குழந்தைகளிடம் 7 லட்ச ரூபாயும் வசூல் செய்வது ஏன்? என்றும் ‘யோகா குரு’ தங்கராஜ் சுவாமிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.


 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் சுவாமிகள். யோகாசன குருவான இவர் ‘ஈஷா யோகா மையம்’ தொடர்பாக தனக்குள் எழுந்த சில கேள்விகளை ஜக்கி வாசுதேவுக்கு ஏற்கெனவே கடிதமாக அனுப்பியுள்ளார்.
 
அதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஈஷா யோகா மையத்தை சேர்ந்த ஜக்கி வாசுதேவ் ஓரு விலாங்கு மீன்’ எனவும், ‘அறத்தை பணத்திற்காக விலை கூறி விற்பவர்’ எனவும் குற்றம் சாட்டினார்.
 
‘ஜக்கி வாசுதேவ், ‘சத்குரு’ என்று தன்னை அழைத்துக்கொள்கிறார்; ஆனால் ‘சத்குரு’ என்று சொல்வதற்கு ஏற்றபடி ஜக்கிவாசுதேவின் நடவடிக்கைகள் இல்லை; சாஸ்திர அனுபவங்கள் எதுவும் இல்லாமல் அவர் பேசிவருகிறார்’ என்று குறிப்பிட்ட தங்கராஜ் சுவாமிகள், ‘ஜக்கி வாசுதேவ், தான் யோகியா அல்லது துறவியா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.
 
ஆன்மிகத்தின் பெயரால் பெண்களை தவறான கருத்துகளை சொல்லி வழிநடத்துவதும், யோகா மையத்தில் பெண்களை வைத்து இருப்பதும் சரியல்ல என்று கூறிய தங்கராஜ் சுவாமிகள், ஈஷா மையப் பெண்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்கள் உண்மையான ஆன்மிகத்தை உணர்ந்து இருந்தால் அவர்களே திரும்ப வருவார்கள் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், ஜக்கிவாசுதேவ் தன்னுடைய குரு பாரம்பரியத்தை தெரிவிக்காமல் மறைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய தங்கராஜ் சுவாமிகள், ஈஷா மையத்தில் பாதரசத்தால் சூரிய குண்டம், சந்திர குண்டம் அமைத்து, அதில் குளித்தால் நன்மைகள் ஏற்படும் என கூறும் ஜக்கிவாசுதேவ் மட்டும், ஏன் தினமும் அந்த குண்டங்களில் குளிப்பதில்லை? என வேறுபல கேள்விகளையும் அடுக்கினார்.