1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2016 (21:44 IST)

வழக்கை சந்திக்க தயார் என கூறுவது வீரம் அல்ல - இல.கணேசன்

தான் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்காமல் வழக்கை சந்திக்க தயார் என கூறுவது வீரம் அல்ல என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், ’’வைகோவின் குற்றச்சாட்டை பொறுத்தவரை வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என டீ கடையில் உட்கார்ந்து இருப்பவர் பேசலாம். திண்ணையில் அமர்ந்து கொண்டு பேசலாம். ஆனால் பொறுப்பில் இருக்கும் தலைவர் இவ்வாறு குற்றம் சாட்டலாமா?
 
அதோடு மட்டுமல்ல தான் இவ்வாறு பேசியதற்காக வருத்தம் தெரிவிக்காமல் வழக்கை சந்திக்க தயார் என கூறுவது வீரம் அல்ல. தேமுதிகவோ, மக்கள் நல கூட்டணியோ எங்கள் இலக்கு அல்ல, கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக, அதற்கு முன்னர் ஊழலை அறிமுகப்படுத்திய திமுக இவற்றை அகற்றுவது தான் எங்கள் இலக்கு.
 
தேமுதிகவையோ, மக்கள் நல கூட்டணியை பற்றி பேசுவதால் எங்கள் இலக்கு திசை மாறி போகும். தற்போது எல்லா கட்சிகளுமே ஊழல் ஒழிப்பையும், மதுஒழிப்பையும் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாஜகவால் மட்டுமே மதுவிலக்கு கொண்டுவர முடியும்.
 
இதற்கு முன்னர் ஊழல் புரிந்த கட்சிகள் மீண்டும் ஆட்சி புரிய வேண்டுமா? அல்லது ஆட்சிக்கு வந்த பிறகும் ஊழல் நடக்காத ஆட்சி வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
 
வைகோ தனியார் தொலைகாட்சியில் நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்றது சரியல்ல, நிருபர்கள் கேட்கும் கேள்வி என்பது மக்கள் சார்பாக கேட்கப்படுபவை. எனவே அதற்கு பதில் அளிப்பது கடமை” என்று கூறியுள்ளார்.