1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (14:24 IST)

ஜெயலலிதாவின் ஒருமுறை பயணத்திற்கு மினுமினுக்கும் சாலையா? - ராமதாஸ் கேள்வி

முதலமைச்சர் ஒரே ஒரு முறை பயணம் செய்கிறார் என்பதற்காக அவர் பயணிக்கும் சாலைகள் அனைத்தையும் புதுப்பிப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தானே என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “’’அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சென்னையில் இன்று நடைபெறுகின்றன. உள்ளரங்கத்தில் அமைதியாக நடத்தப்பட வேண்டிய இந்த கூட்டத்திற்காக அக்கட்சியின் நிர்வாகிகளும், அமைச்சர்களும் நடத்தும் அத்துமீறல்கள் முகம் சுழிக்க வைக்கின்றன. இவை கண்டிக்கத்தக்கவை.
 
அரசியல் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் போது அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவது இயல்பு தான். ஆனால், அந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும். ஆனால், அதிமுக பொதுக்குழுவுக்காக சென்னையில் நடந்தவை அனைத்தும் அத்துமீறல்கள் தான். 
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ்பாடி அவரிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும்... எவ்வளவு ஊழல்கள் வேண்டுமானாலும் செய்யலாம்; அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்று கருதும் அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஜெயலலிதாவின் கண்களில் படும் வகையில் பதாகைகளை வைக்க வேண்டும் என்பதற்காக போயஸ் தோட்டம் தொடங்கி பொதுக்குழு நடைபெறும் இடம் வரை உள்ள அனைத்து சாலைகளின் மையத் தடுப்புகளையும், நடைபாதைகளையும் ஆக்கிரமித்துள்ளனர். 
 
இதனால் இராதாகிருஷ்ணன் சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகியவற்றில் நடைபாதைகளில் செல்ல முடியாமல் சாலைகளில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் ஆளானார்கள். அதுமட்டுமின்றி, பதாகைகளை சாலைகளில் வைத்து தயாரித்ததால், பல இடங்களில் பாதி சாலைகள் ஆக்கிரமிக்கப் பட்ட நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் பதாகைகள் சரியாக கட்டப்படாததால் அவை சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மீது விழுந்ததால் அவர்களில் பலர் காயமடைந்தனர்.
 
போக்குவரத்து அதிகமுள்ள பல சாலைகளின் நடுவில் பள்ளம் தோண்டி வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது. வரவேற்பு வளைவுகள் மற்றும் பதாகைகள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் நடைபாதைகளும், சாலைகளும் சேதமடைந்திருக்கின்றன.
 
வழக்கமாக ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவும், நிகழ்ச்சி முடிந்து இரு நாட்கள் வரையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பதாகைகளை அமைக்கலாம் என்பது தான் விதியாகும். ஆனால், அதிமுகவின் பொதுக்குழுவுக்கு 3 நாட்களுக்கு முன்பே பதாகைகளும், வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
 
பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர அதிமுகவினரும் ஆயிரக்கணக்கில் திரண்டிருப்பதால் சென்னை கிண்டி முதல் திருவான்மியூர் வரை இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இது ஒருபுறமிருக்க பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் பளபளவென மின்னும் வகையில் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாலைகளில் பெரும்பாலானவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் அச்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
 
மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சாலைகளை சீரமைக்காமல், முதலமைச்சர் ஒரே ஒரு முறை பயணம் செய்கிறார் என்பதற்காக அவர் பயணிக்கும் சாலைகள் அனைத்தையும் புதுப்பிப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால்  நடத்தப்படும் ஆட்சி ஆகும்.
 
ஆனால், மக்கள் நலனையெல்லாம் புறக்கணித்து விட்டு ஜெயலலிதா என்ற ஒரு தனி நபருக்காக அனைத்து அரசு எந்திரங்களும் பாடுபடுவது எந்த வகை ஜனநாயகம்? மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அவர்களை சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் ஜெயலலிதாவால் முடியவில்லை.
 
ஆனால், ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கக்கூடிய அதிமுக என்ற தனிப்பட்ட ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவிட ஜெயலலிதா துணிகிறார் என்றால், தம்மை எவராலும் கேள்வி கேட்க முடியாது என்ற அதிகார மமதையின் உச்சத்தில் இருக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
 
எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களையும் தரைக்கு கொண்டு வரும் வல்லமையும், தரையில் இருப்பவர்களை கோபுரத்தின் மீது அமர்த்தும் வல்லமையும் மக்களுக்கு உண்டு. அந்த வல்லமையை வரும் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக மக்கள் செயல்படுத்தி காட்டப்போவது உறுதி’’ என்று கூறியுள்ளார்.