வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2015 (23:17 IST)

ஜெயலலிதா சொல்வதன் அர்த்தம் இதுதானோ? விஜயகாந்த் கேள்வி

சென்னையிலுள்ள முக்கிய வணிக வளாகங்களில் (MALL) சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள திரையரங்குகள் இயங்கி வருகிறது. இதனை அதன் உரிமையாளர்களிடமிருந்து உருட்டியும், மிரட்டியும், அதிகார பலத்தைக் கொண்டு ஒருசிலர் வாங்கியுள்ளதாக ஆங்கில நாளேட்டில் ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்துள்ளன என தேமுதிக குற்றம் சாட்டியுள்ளது.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையிலுள்ள முக்கிய வணிக வளாகங்களில் (MALL) சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள திரையரங்குகள் இயங்கி வருகிறது. இதனை அதன் உரிமையாளர்களிடமிருந்து உருட்டியும், மிரட்டியும், அதிகார பலத்தைக் கொண்டு ஒருசிலர் வாங்கியுள்ளதாக ஆங்கில நாளேட்டில் ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்துள்ளன.
 
இதை பார்க்கும் போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.
 
கடந்த 1991முதல் 1996 ஆம் ஆண்டு ஆட்சியின் போது சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா தப்பித்துக் கொண்டார். ஆனால், அவருடனேயே வசித்து வரும் சசிகலாவும் அவரது உறவினர்களும் மீண்டும் சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்களா? உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதை மறந்துவிட்டார்களா?
 
ஜெயலலிதா செல்லும் இடமெல்லாம் அவரது நிழல் போலவே தொடரும் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொத்துக்களை வாங்கிக்குவிக்க எங்கிருந்து பணம் வந்தது என்று மக்களுக்கு நன்கு தெரியும். 
 
அதிமுக பொதுக் குழுவில் ஜெயலலிதா பேசும்போது, எனக்கென்று யாருமே இல்லை, சொந்தம், பந்தம், உறவு, நட்பு எல்லாமே நீங்கள்தான், எனது குடும்பமும் நீங்கள் தான் என்று கூறியுள்ளார்.
 
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூட, எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சொத்து என எதுவுமே இல்லை, எனக்கு எல்லாமே மக்களும், அதிமுக கட்சியும் தான் என்று நீட்டி முழங்கியுள்ளார்.
 
ஒருபக்கம் இப்படியெல்லாம் பேசிவிட்டு, மறுபக்கம் தோழி மற்றும் உறவினர்கள் மூலம் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதை என்னவென்று சொல்வது. எல்லாமே எனக்கு மக்கள்தான் என்று ஜெயலலிதா சொல்வதன் அர்த்தம் இதுதானோ?
 
கடந்த கால அதிமுக ஆட்சியில்,பல இடங்களில் நிலங்களாக சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்கள், தற்போதைய அதிமுக ஆட்சியில் கட்டிடங்களாக வாங்கி குவிக்கிறார்கள் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இதற்குரிய விளக்கத்தை தமிழக மக்களுக்கு அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.