1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (15:27 IST)

ஜல்லிக்கட்டு நடத்த ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதா? - ராமதாஸ் கேள்வி

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்திருந்தால், சட்டப்படியாக அனுமதி பெற்றுத் தந்தால் தான் மத்திய அரசை ஆதரிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து அதை சாதித்திருக்க முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
எது நடக்கக்கூடாது என்று தமிழக மக்கள் வேண்டிக்கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அடுத்த 4 வாரங்களுக்கு இந்த இடைக்காலத் தடை பொருந்தும் என்பதால் வரும் 15 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மதுரை மாவட்டத்திலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது.
 
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து 2014 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் இவ்விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு தவறான நம்பிக்கையை தரும் செயல்களிலும், சட்டத்தின்முன் செல்லுபடியாகாத நடவடிக்கைகளிலும் மட்டுமே ஈடுபட்டனவே தவிர, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 19.05.2014 அன்றே தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் 19 மாதங்களாகிவிட்ட நிலையில் அம்மனுவை விரைவாக விசாரித்து, தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிடவில்லை.
 
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஆதரவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்திருந்தால் கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியிருக்க முடியும். ஆனால் அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. நடப்பாண்டிலாவது ஜல்லிக்கட்டை  நடத்த தமிழக அரசு துரும்பைக்கூட அசைக்கவில்லை.
 
ஒருவேளை உச்சநீதிமன்றம் விதித்த தடையை சீராய்வு மனு மூலம் அகற்ற முடியாவிட்டால், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்டத்திருத்தம் செய்யலாம் என்று தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை.
 
அதிமுக ஆதரவைக் கேட்டு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்கே வந்து சந்தித்துவிட்டு சென்றார்கள்.
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சட்டப்படியாக அனுமதி பெற்றுத் தந்தால் தான் மத்திய அரசை ஆதரிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து அதை சாதித்திருக்க முடியும்.
 
ஆனால், தமது நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் நிபந்தனையாக வைத்து சாதித்துக் கொண்ட முதலமைச்சர், மக்கள் உணர்வு சார்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி பெற்றுத்தருவதற்கு தவறி விட்டார்.
 
அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டிகளை எப்படியாவது நடத்தியே தீருவோம் என வாக்குறுதியளித்த பாரதிய ஜனதாவும் கடைசி நேரம் வரை எதையும் செய்யவில்லை. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடரிலாவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. இறுதியாக அவசர சட்டம் பிறப்பிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினேன்.
 
ஆனால், மத்திய அரசோ நிர்வாக ஆணை பிறப்பித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் எளிதாக தடை விதித்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
 
தமிழ்நாட்டு மக்களின் மனதில் நம்பிக்கையையும், ஆசையையும் விதித்து, அது உச்சநீதிமன்றம் மூலம் உடனடியாக பறிக்கப்படுவதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான மாற்றுவழிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும்.
 
மத்திய அரசின் நிர்வாக ஆணைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிதாக அவசரச்சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்திருக்கும் யோசனையை செயல்படுத்த முடியுமா? என மத்திய அரசு ஆராய வேண்டும். உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.