திருச்சி த.வெ.க-வில் வாரிசு போட்டி: கு.ப.கிருஷ்ணன் VS வெல்லமண்டி நடராஜன்! புஸ்ஸியின் ராஜதந்திரம்
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு தற்போது வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் சிரஞ்சீவியை வேட்பாளராக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் நெருக்கம் காட்டி வரும் அவர், தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிக்கும் பிரம்மாண்ட கூட்டத்தைத் தனது சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்து அசத்தினார்.
ஆனால், முதலமைச்சரிடம் கு.ப.கிருஷ்ணன் இப்படி நெருக்கமாவதை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கு.ப.கிருஷ்ணனுக்கு போட்டியாகக் கடந்த வாரம் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவஹர்லால் நேரு ஆகியோரை புஸ்ஸி ஆனந்த் மேடையேற்றி, முதலமைச்சருக்கு செங்கோல் கொடுக்க வைத்தார்.
புஸ்ஸி ஆனந்தின் இந்த அதிரடி ஆதரவால் உற்சாகமடைந்த ஜவஹர்லால் நேருவும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டுத் தற்பொழுது கோதாவில் குதித்துள்ளார். இதன் காரணமாக, "திருச்சி தவெக-வில் யார் கோலோச்சுவது?" என்ற அதிகார போட்டி இரு முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு இடையே தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva
