வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (08:23 IST)

பெரும்பாக்கம் ஏடிஎம் மையத்தில் கண்காணிப்பு கேமராவை திருடிய இளைஞர் கைது

பெரும்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடியதாக இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. அந்த வங்கியின் தரை தளத்தில் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
 
அந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த 22 ஆம் தேதி மர்மநபர் ஒருவர் உடைத்து திருடிச்சென்று விட்டதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை காவல்துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக படப்பையை சேர்ந்த பாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
பிஎஸ்சி பட்டதாரியான பாண்டியின் சொந்த ஊர் சிவகாசி. தனியார் கல்லூரிகளில் "இன்வெட்டர்"களை பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.
 
இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு கடந்த 22 ஆம் தேதி சென்று ஏடிஎம் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றேன். 
 
பணம் வராததால் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கையால் தட்டினேன். அது கையோடு வந்துவிட்டது.
 
பின்னர் அந்த கண்காணிப்பு கேமராவை அங்கேயே வைத்து விட்டேன்" என்று  கூறினார். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.