வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (14:16 IST)

இலங்கைக்கு "வராஹா" போர்க் கப்பலை வழங்கும் மத்திய அரசு - வைகோ கண்டனம்

இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு ‘வராஹா’ போர்க் கப்பலை வழங்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 27 ஆம் தேதி அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஹா’ கப்பலை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சைத் துரோகம் ஆகும்.
 
1992 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஹா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் ராஜபக்சே வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது.
 
பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது.
 
இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ்க் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக நிரூபிக்கும் என எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.