தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை
தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மட்டும் அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 2024-ஆம் ஆண்டு சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமினில் வெளிவந்தார்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பண பட்டுவாடா செய்யப்படலாம் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது. அவருக்கு சொந்தமான விடுதிகள் மற்றும் இல்லங்களில் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
சோதனையின் முடிவில்தான் கைப்பற்றப்பட்ட பணம் அல்லது ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva