1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (23:14 IST)

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் உயிர்க் கொல்லி நோயான டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவுவதை தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
 
நன்னீரில் உருவாகும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் எப்போதோ ஒருமுறை வந்த நிலை மாறி, இப்போது ஆண்டு தோறும் தோன்றி உயிர்களை பலிவாங்குவது வழக்கமாக உள்ளது.
 
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
 
ஆனால், டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் சென்னை, கரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா இருவர், திருவள்ளூர், தருமபுரி மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
 
மழை காரணமாக சேரும் நன்னீர் முறையாக வழிந்தோடுவதற்கு வகை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாலைகள் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் முறையாக அமைக்கப்படாததன் காரணமாக எல்லா இடங்களிலும் நன்னீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
நன்னீரால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்பதையும், அதனால் நன்னீர் தேங்காமல் பார்த்துக் பொது மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் போதிலும், அந்த அறிவுரைகளை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை தமிழக அரசு உறுதி செய்யவில்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியதற்கு அதுவே காரணம்.
 

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதுகுறித்த உண்மை நிலையை விளக்கி, அந்நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்த பொது மக்களும், மருத்துவர்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பதை வெளிப்படையாக கூறியிருக்க வேண்டும்.
 
ஆனால், தமிழகத்தில் டெங்கு இல்லை, மர்மக் காய்ச்சல் தான் உள்ளது என்று கூறியே எல்லா உண்மைகளையும் அரசு மறைத்து விட்டது. டெங்கு காய்ச்சல் கட்டுக்கு அடங்காமல் பெருகுவதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டத்திலும், சென்னையிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. அப்போதும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து வந்தது.
 
இதனால் அந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 66 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். இப்போதும் அதே போன்ற அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்து வருவதால் இப்போதும் டெங்கு காய்ச்சலால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
 
அப்படி ஒரு நிலையை தடுக்க வேண்டுமானால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த உண்மை நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 
அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆய்வுகளை செய்யவும் தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
 
டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம் என்பது தான் மருத்துவர் என்ற முறையில் தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்.
 
பப்பாளி இளைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பதன் மூலமும், நில வேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும்.
 
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்பு மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அந்த அறிக்கயில் கூறியுள்ளார்.