1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 9 ஜூலை 2015 (21:04 IST)

’ஐ.ஐ.டி. தேர்ச்சி விகிதம் அதிர்ச்சி அளிக்கிறது’ - விஜயகாந்த்

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் 33 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தது அதிர்ச்சி அளிக்க கூடியது என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், சமச்சீர் கல்விமுறையை கொண்டுவந்தபோது அனைவரும் வரவேற்றனர். 
 
ஆனால், தற்போது பள்ளிக் கல்வித்துறையின் நடைமுறைகளை காணும்போது, கல்வியின் தரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு மளமளவென அதிகரித்து, இந்த 2015ஆம் ஆண்டு 92.9 மற்றும் 90.6 சதவீதம் தேர்ச்சி என சொல்லப்பட்டுள்ளது. 
 
அப்படி தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி கற்கச் செல்லும் விகிதாச்சாரம் குறைந்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து மிக மிக குறைவான அளவே உயர் கல்விக்கு சென்றுள்ளனர். கடந்த 4 வருடமாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியாளர், பட்டய கணக்காளர் படிப்பிற்கு அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வில், தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து வருகிறது. 
 
சமீபத்தில் நடந்த ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதியும் 33 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடியதாகும். இதே நிலைதான் மருத்துவம் மற்றும் பட்டயக்கணக்காளர் படிப்பிற்கும் உள்ளது. 
 
கடந்த காலங்களில் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்தான் இதுபோன்ற தேர்வுகளில் அதிகளவு தேர்ச்சி பெற்றதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஆனால் நம்மைவிட பின்தங்கியுள்ள மாநிலங்களை சார்ந்தவர்கள் தற்போது அதிகளவில் தேர்வாகும்போது, மிகுந்த அறிவுத்திறனும், ஆற்றலும், உழைப்புமுள்ள தமிழக மாணவ, மாணவியரால் ஏன் தேர்ச்சி பெற முடியவில்லை?. 
 
இதற்கு முழுமுதற் காரணம் தமிழகப் பள்ளிகளில் கல்வியின் தரம், தேசிய கல்வித்தரத்திற்கு இணையாக இல்லை. குறிப்பாக, 9, 10, 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை, அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிடும் என்றும், தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது என கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர். 
 
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி சதவீதம் அதிகம் என புள்ளி விவரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களையும், சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.