செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (18:21 IST)

அரசு அதிகாரிகள் மீது லஞ்சப் புகார் அளித்தால் அரசின் அனுமதி வேண்டுமா? - புதிய உத்தரவால் சர்ச்சை

இனிமேல் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் அரசின் குறிப்புகளைப் பெற்ற பிறகு, இலஞ்ச ஒழிப்பு போலீசின் விசாரணைக்கு ஆணையம் உத்தரவிடப்படும் என்ற புதிய உத்தரவால் சர்ச்சை எழுந்துள்ளது.
 

 
முன்னதாக இது குறித்து கடந்த 2ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டிருந்த அரசாணையில், ”உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி அரசு ஊழியர்கள் அனைவரையும் சமமாக பாவித்து அவர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்கும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, இனி தமிழகத்தில் உள்ள எந்த அரசு ஊழியராக இருந்தாலும், அவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊழல் தடுப்பு காவல் துறையினர் நேரடியாக விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்யவோ கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த அரசாணையானது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அரசாணைக் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “லஞ்ச-ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என சமூக அமைப்புகள் போராடிவரும் சூழலில், இந்த அரசாணையானது ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் விதத்தில் உள்ளது.
 
இதற்கு முன்னர், உயர்நிலை அலுவலர்களின் மீது ஊழல் வழக்குகள் தொடர அரசின் முன் அனுமதிபெற வேண்டும் என்ற நிலை இருந்தது; இது அரசு ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுகிறது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
 
உண்மையிலேயே, இந்த அரசாங்கம் இலஞ்ச-ஊழலை ஒழிக்கும் எண்ணத்தில் இருந்திருந்தால், இனிமேல் எந்த  நிலை அரசு ஊழியர் மீதும் ஊழல் புகார் வந்தால் அரசின் முன் அனுமதி இன்றி DVAC வழக்குதொடுக்கலாம் என்று அரசாணை வெளியிட்டிருக்கலாம்.
 
அதற்குப் பதிலாக, அனைத்து நிலை ஊழியர்கள் மீதும் வழக்குத் தொடர அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது, இலஞ்சத்தில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்குத்தான் சாதகமாக முடியும். இந்த அரசாணையை உடனே திரும்பப்பெறவேண்டும்” என்று கூறியுள்ளார்.