வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 13 ஜூலை 2016 (16:16 IST)

தாக்கிய போலீசாரை பணி நீக்கம் செய்யாவிட்டால் தற்கொலை செய்வோம் : ஆட்டோ டிரைவர் ராஜா ஆவேசம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ஆட்டொ ஓட்டுனர் ராஜா, தனது மனைவி உஷா மற்றும் மகன் சூர்யா ஆகியோருடன்  நேற்று முன் தினம் செங்கம் பஜார் தெருவுக்கு வந்தார்.



அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டையானது. இதை கவனித்த போலீஸ்காரர்கள் மூவர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது இது எங்கள் குடும்ப விஷயம் நீங்கள் தலையிட வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதில் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று போலீசாரும், கணவன், மனைவி மற்றும் மகனை ஆத்திரம் தீர லத்தியால் அடித்து துவைத்தனர். இதில் அவர்கள்  மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் போலீஸாரிடம், அவர்கள் தவறு செய்தால் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் அதைவிட்டு நீங்கள் ஏன் இவ்வாறு காட்டுமிராட்டித்தனமாக தாக்குகிறீர்கள் என கூறினர். இதில் மேலும் ஆத்திரமடைந்த போலீஸார் பொதுமக்களையும் தாக்க தொடங்கினர்.

இந்த சம்பவம் தனியார் தொலைக்காட்சிகளில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பலரும் போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ராஜாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விசாரிக்க சென்ற இடத்தில் லத்தியால் அடித்து காயப்படுத்திய காவலர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனாலும், சமாதானம் அடையாத பொதுமக்கள் திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மூன்று போலீசாரையும், ஆயுதப்படைக்கு மற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

ராஜா குடும்பத்தினர் திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களின் உடல் முழுவதும் லத்தியின் தடம் பதிந்துள்ளது. இந்நிலையில் ராஜா செய்தியாள்களை சந்தித்து  பேசினார். அவர் கூறும் போது “அந்த மூன்று போலீசாரும் நடுரோட்டில் எங்களை தாக்கியதோடு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் எங்களை அடித்தனர். ஒரு இன்ஸ்பெக்டர்தான் எங்களை வீட்டிற்கு அனுப்பினார்.

அதன்பின், வலி தாங்க  முடியாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றோம். அங்கு வந்த போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடாது. தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறவேண்டும் என்று கூறி, எங்களை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதை அடுத்து எங்களை சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எங்கள் பிரச்சனையில், பொதுமக்களின் முற்றுகை, சாலை மறியல் காரணமாக மூன்று போலீசாரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளனர். எங்களை கண்மூடித்தனமாக தாக்கிய மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்” என்று ராஜா கூறினார்.